3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அங்கன்வாடியால் குழந்தைகள் அவதி
3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அங்கன்வாடியால் குழந்தைகள் அவதி
UPDATED : பிப் 11, 2015 12:00 AM
ADDED : பிப் 11, 2015 10:28 AM
வால்பாறை: வால்பாறையில் இடிந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை மூன்று ஆண்டுகளாக சீரமைக்காமல், நகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 42 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், மொத்தம் 550 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில், கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, அங்கன்வாடிமையம் இடிந்த நிலையில் காணப்படுகிறது.
இதை சீரமைத்துத்தரக்கோரி அங்கன்வாடியினர், கடந்த மூன்று ஆண்டுகளாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இதனால், இந்த மையத்தில் இருந்த குழந்தைகள் அருகில் உள்ள கோ-ஆப்பரெடிவ் காலனி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அங்கன்வாடி பொறுப்பாளர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடிகளில், அடிப்படை வசதி இல்லை. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது செயல்படும் கோ-ஆப்பரெடிவ்காலனி அங்கன்வாடியும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது.
மையத்தை சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடப்பதால், அடிக்கடி பாம்புகள் மையத்தில் நுழைகின்றன. இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடித்து வருகிறது. அங்கன்வாடி சமையல் அறை இடிந்த நிலையில் உள்ளது. எனவே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை நகராட்சி அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகராட்சிக்கு சம்பந்தமில்லை!
அங்கன்வாடி சீரமைப்பது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "அங்கன்வாடி மையத்திற்கும், நகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை. பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடம் சீரமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகம்தான் முடிவுசெய்ய வேண்டும்" என்றனர்.
