அடையான அட்டை இல்லாமல் கல்லூரிக்குள் அனுமதி இல்லை: போலீஸ் கமிஷனர்
அடையான அட்டை இல்லாமல் கல்லூரிக்குள் அனுமதி இல்லை: போலீஸ் கமிஷனர்
UPDATED : பிப் 15, 2015 12:00 AM
ADDED : பிப் 15, 2015 12:32 PM
எழும்பூர்: அடையாள அட்டை இல்லாத மாணவர்களை, கல்லுாரி வளாகத்தினுள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கக்கூடாது என, கல்லுாரி முதல்வர்களிடம், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வலியுறுத்தினார்.
சென்னையில், கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, அடிக்கடி நடக்கும் மோதலை தடுக்கும் வகையில், கல்வியாளர்கள், போலீசாரின் மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. அதில், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல், இணை, துணை கமிஷனர்கள் மற்றும் 13 கல்லுாரிகளின் முதல்வர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது, கல்லுாரி முதல்வர்களுக்கு காவல் துறையால் வழங்கப்பட்ட ஆலோசனைகளில் சில:
* அடையாள அட்டை இல்லாத மாணவர்களை கல்லுாரி வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.
* 50 மாணவர்களுக்கு, ஒரு வழிகாட்டி ஆசிரியர் வீதம், நியமித்து அவர்களை பற்றி ஏதேனும் புகார் இருந்தால், முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.
* கல்லுாரி வளாகத்தை கல்லுாரி முதல்வரும், விடுதியை காப்பாளரும் கண்காணிக்க வேண்டும்.
* கலவரங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரத்தை, கல்லுாரி முதல்வர்களுக்கு தெரிவித்தால், அவர்களும் ஒத்துழைத்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கல்லுாரி நுழைவு வாயில், அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு கேமராக்களை சம்பந்தப்பட்ட துறையினர் பொருத்த வேண்டும்; படிக்கட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பேருந்து தினம் கொண்டாடுவதை தடை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தும்பை விட்டு வாலை பிடிப்பதா?
ஆலோசனைகள் குறித்து, கல்லுாரி முதல்வர்கள் கூறியதாவது: கூட்டத்தில் தெரிவித்த ஆலோசனைகள் அனைத்தும், ஏற்கனவே பெரும்பாலான கல்லுாரிகளில் நடைமுறையில் உள்ளன. ஆயினும், கல்லுாரி வளாகத்தை விட்டு, வெளியே பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக் கொள்கின்றனர்.
மோதலில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட கல்லுாரி மாணவர்களை ஒரே நேரத்தில் அழைத்து, போலீசார் கவுன்சிலிங் வழங்க வேண்டும்; அதை விட்டுவிட்டு, எங்களை அழைத்து, ஆலோசனை வழங்குவது, தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
