ஆசிரியர் பயிற்சி கையேடுகளின் தாமத வினியோகத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி
ஆசிரியர் பயிற்சி கையேடுகளின் தாமத வினியோகத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி
UPDATED : பிப் 20, 2015 12:00 AM
ADDED : பிப் 20, 2015 12:36 PM
கோவை: பள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் கல்வி இடைநிலைக் கல்வித் திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், ஒன்பது, 10ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, எளிமையான முறையில் பாடங்களை கற்பிப்பது சார்ந்த, பயிற்சி கையேடு பாடம் வாரியாக வினியோகிக்கப்படும்.
நடப்பு கல்வியாண்டிற்கான பயிற்சிகள், 2014 நவ., மற்றும் டிச., மாதம் நடந்தது. பயிற்சிகளின் முடிவில் வழங்க வேண்டிய கையேடு, தற்போதுதான் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப் பட்டுள்ளது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் புத்தகங்கள் வந்துள்ளன.
இதுகுறித்து, 10ம் வகுப்பு ஆசிரியர்கள் கூறியதாவது: நடப்பு 2014 - 15ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சி கையேடு, இப்போதுதான் வினியோகிக்கப்பட்டுள்ளது. பாடங்கள் நடத்தும் சமயத்தில் கிடைத்திருந்தால், ஆசிரியர்கள் கற்பித்தலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வசதியாக அமைந்திருக்கும். ஆனால், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், பயிற்சி கையேடுகள் வினியோகிப்பதில் பலனில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
