UPDATED : பிப் 22, 2015 12:00 AM
ADDED : பிப் 22, 2015 12:11 PM
சென்னை: தினமலர் சார்பில், சென்னையில், நேற்று நடந்த, கிரிக்கெட் குவிஸ் போட்டியில், கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலத்துடன் பங்கேற்றனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னையில், தினமலர் சார்பில், கிரிக்கெட் குவிஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இணையதளம் மூலம்...
சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள, சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடந்த இப்போட்டியில் பங்கேற்க, 500க்கும் மேற்பட்ட அணியினர் அலைபேசி மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். காலை, 9:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், சிறுவர் முதல் முதியவர் வரை, இரண்டு பேர் கொண்ட அணியாக, 12 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற, இரண்டு பேர் கொண்ட அணியிடம் தகுதிச் சுற்று நடத்தப்பட்டது. அதில், ஆடியோ, வீடியோ முறையிலான, 25 கேள்விகள் கேட்கப்பட்டன. தகுதி சுற்றில், அடுத்தடுத்த இடங்களை பெற்று, வெற்றி பெற்ற, எட்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த அணிகளிடம், ஆறு சுற்றுகளாக கேள்விகள் கேட்கப்பட்டன.
ருசிகரமான, அபூர்வமான தகவல்கள், ஆடியோ, வீடியோ, புகைப்படத்தோடு கேட்டபோது, பார்வையாளர் வரிசையில் இருந்தோர் பதில் சொல்ல முந்தினர். ஆறாவது சுற்று முடிவில், 160 புள்ளிகள் பெற்று, கேஷவ் - ஸ்ரீநாத் அணி முதலிடம் பிடித்து, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு கிரிக்கெட் கிட்களை பரிசாகப் பெற்றனர். மொத்தம், 140 புள்ளிகள் பெற்று, பிரசாந்த் சம்பத் - ரமேஷ் நடராஜன் அணி இரண்டாம் இடம்; 45 புள்ளிகள் பெற்று, கவுதவ் சுந்தரராஜன் - ரமணன் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. இரண்டாம் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கிரிக்கெட் கிட்; மூன்றாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசாக...
முதல், மூன்று இடங்களை பிடித்த அணியினருக்கு, நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறாத ஐந்து அணிகளுக்கு ஆறுதல் பரிசாக கிரிக்கெட் பேட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தினமலர் நாளிதழ் விளையாட்டு செய்திகள் குறித்து சிறந்த கருத்துக்கள் எழுதிய மூன்று பேருக்கு பரிசாக 1,000 ரூபாய்; இரண்டு பேருக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டது.
போட்டியின்போது பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளித்த 10 பேருக்கு கிரிக்கெட் பேட்; 10 பேருக்கு பந்து பரிசாக வழங்கப்பட்டன. பலருக்கு தினமலர் பெயர் பொறித்த தொப்பிகள் வழங்கப்பட்டன. மேலும், தகுதி சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
போட்டியை கோவை பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியரும், குவிஸ் மாஸ்டருமான ரங்கராஜன், நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார். இப்போட்டியில், பள்ளி மாணவ, மாணவியர், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
பரிசு பெற்றது மகிழ்ச்சி
முதல் பரிசுபெற்ற அணி கூறுகையில், "இதுபோன்ற கிரிக்கெட் குவிஸ் போட்டி அதிகம் நடப்பதில்லை. அப்படி அரிய ஒரு போட்டியை சென்னையில் நடத்திய தினமலர் நாளிதழுக்கு நன்றி. வெறித்தனமாக பார்த்த கிரிக்கெட் மூலம், இந்த போட்டியில், பரிசு மற்றும் பாராட்டு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது" என்றது.
* நாராயணன், 35, மாற்றுத்திறனாளி, மடிப்பாக்கம்: நேரத்தை வீணடித்து, விளையாட்டாக பார்க்கும் இந்த கிரிக்கெட்டிலும், பொது அறிவு உள்ளதை தெரிந்து கொண்டோம்.
* ராஜா ராமன், 18, மாற்றுத்திறனாளி மடிப்பாக்கம்: தினமலர் விளம்பரத்தை பார்த்து நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனால், இங்கு வந்ததால், கிரிக்கெட் குறித்து பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன்.
* நாராயணன், 49, சாலிகிராமம்: கிரிக்கெட் குவிஸ் போட்டிகள் நடப்பது அரிது. அதுவும் சென்னையில் நடக்கிறது என்று தெரிந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
* தமிழ்செல்வன், 13, பிராட்வே: எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். அது தெரிந்த என் ஆசிரியர், இந்த போட்டி குறித்து தெரிவித்து, பங்கேற்க கூறினார். இந்த முறை வெற்றி கிடைக்கவில்லை, அடுத்த முறை ஜெயித்து விடுவேன்.
* காவியா, 12, ஆழ்வார்பேட்டை: எனக்கு கிரிக்கெட் குறித்து எதுவும் தெரியாது. இருப்பினும், இங்கே கேட்கப்பட்ட ஆடியோ, வீடியோ கேள்விகள், எனக்குள் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
* ஜாக்லின், 12, ஆழ்வார்பேட்டை: எங்கள் ஆசிரியர் கூறியதையடுத்து, எங்கள் பள்ளியில் இருந்து, 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்துள்ளோம். நிச்சயம் எங்கள் பள்ளி சார்பில், ஒருவர் பேட் அல்லது பந்தை பரிசாக பெறுவோம்.
* சில்வியா, 12, ஆழ்வார்பேட்டை: பல கேள்விகள் கடினமாக இருந்தபோதிலும், நடுவர் போட்டியை தொகுத்து வழங்கிய விதமும், சில கடினமான கேள்விகளுக்கு க்ளு கொடுத்தது சிறப்பம்சமாக இருந்தது.
நிகழ்ச்சி சிதறல்
* குவிஸ் போட்டியின் இடைவேளையின் போது, பார்வையாளர்களுக்கு டீ, பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
* பார்வையாளர்களிடம் கேள்வி கேட்கும் போது, பதில் சொல்ல, பள்ளி மாணவர்கள், அதிக ஆர்வத்துடன், இருக்கையை விட்டு எழுந்து வந்து, அரங்கின் முன் குவிந்தனர்.
* கிரிக்கெட் குறித்து தங்களுக்கும் தெரியும் என்பதற்கு சான்றாக பல மாணவியர், பார்வையாளர் கேள்விக்கு பதில் அளித்து பேட், பந்தை பரிசாக பெற்றனர்.
* எங்களால் விளையாட முடியாது; கிரிக்கெட் குவிஸ்சில் பங்கேற்போம் என மாற்று திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
