UPDATED : பிப் 22, 2015 12:00 AM
ADDED : பிப் 22, 2015 12:35 PM
சென்னை: தடகளத்தில், 110 மீ., 400 மீ., தடை ஓட்டப் பிரிவுகளில் சாதித்து வருபவர் தியாகராஜன், 25. சென்னை, புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகரை சேர்ந்தவர். மாநில, தேசிய, பல்கலை போட்டிகளில் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று இருக்கிறார்.
தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ., அரசியல் அறிவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் அவர், 18 வயதில்தான் விளையாட்டில் ஈடுபட துவங்கினார். குடும்ப வறுமையே அதற்கு காரணம் என்கிறார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: அப்பொழுது, நான் ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன்மூலம் கிடைத்த காசை வைத்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வந்தேன். தடை ஓட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. படிப்பும் அவசியம். தற்போது, பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் எனக்கு, வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. திருவாரூரில் 2008ம் ஆண்டு ஜூனியர் பிரிவில், மாநில அளவிலான தடை ஓட்டத்தில் முதல் தங்கத்தை வென்றேன். அந்த திருப்புமுனையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
சமீபத்தில், கேரளாவில் நடந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, நான் ஐந்தாம் இடத்தை பிடித்தேன். வெற்றிபெற்ற மற்றவர்கள் அளவுக்கு எனக்கு தேர்ந்த பயிற்சி கிடைக்கவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் கூட பயிற்சி பெறுகின்றனர். எனக்கு அந்தளவு வசதி இல்லை. தேசிய போட்டிகளுக்கு முன்னதாக, பயிற்சிகளில் ஈடுபடுவோம்.
அப்போது, உடலில் ஆற்றல் குறையும். அதை அதிகரிக்க, பயிற்சிக்கு பின், புரோட்டின் சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். அந்த உணவுகளை வாங்க கூட காசில்லாமல் இருக்கிறேன். எனக்கு யாராவது ஸ்பான்சர் செய்தால், தேசிய போட்டிகள் மட்டும் அல்ல, ஒலிம்பிக் போட்டிகளிலும் சாதிப்பேன். இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.
