UPDATED : பிப் 23, 2015 12:00 AM
ADDED : பிப் 23, 2015 12:33 PM
கடந்த 2014 அக்டோபரில், இந்திய பார் கவுன்சில் ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அதன்படி, வழக்கறிஞர்களாக, ’பிராக்டீஸ்’ செய்பவர்கள் அனைவரும், பார் கவுன்சிலில் இருந்து, சான்றிதழ் பெற வேண்டும். அதாவது, ’சர்டிபிகேட் ஆப் பிராக்டீஸ்’ சான்றிதழ் வழங்கும்படி, பார் கவுன்சிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பங்களை, பார் கவுன்சில் நியமிக்கும் நிர்வாக குழு பரிசீலித்து பரிந்துரைக்கும். அதன்பின், மாநில பார் கவுன்சில், சான்றிதழ் வழங்கும். இந்த விதிமுறைகளில், ’புதுப்பிப்பு’ என்ற வார்த்தை உள்ளதால், அதற்கு, வழக்கறிஞர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சர்டிபிகேட் ஆப் பிராக்டீஸ் மற்றும் புதுப்பிக்கும் விதிகள் ரத்து செய்யப்பட்டன.
புதிதாக கொண்டு வரப்பட்ட விதிகளுக்கு, ’பார் கவுன்சில் ஆப் இந்தியா சர்டிபிகேட் மற்றும் பிராக்டீஸ் செய்யும் இடம் சரிபார்ப்பு விதிகள்’ என, பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 13ம் தேதி, புதிய விதிகள், கெஜட்டில் வெளியிடப்பட்டன. ஒரு வழக்கறிஞர் எங்கு பிராக்டீஸ் செய்கிறார், சங்க உறுப்பினர், முகவரி போன்ற விவரங்களை சரிபார்க்கும் நோக்கில், புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கட்டணமாக, 500 ரூபாய் விதிக்கப்பட்டதற்கும், சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரிசீலனை கட்டணம், 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மீதி 400 ரூபாய் செலுத்துவது கட்டாயமில்லை என்றாலும், விருப்பத்துக்கு உட்பட்டது. வழக்கறிஞர்கள் பிராக்டீஸ் செய்வதற்காக, பார் கவுன்சில் வழங்கும் சான்றிதழ், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் சரிபார்க்கப்பட வேண்டும். அதற்காக, ஐந்து ஆண்டு காலம் முடிவடைவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன், சான்றிதழை சரிபார்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
மூத்த வழக்கறிஞர் என, அந்தஸ்து பெற்றவர்களும், உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களும் (அட்வகேட்ஸ் ஆன் ரிகார்டு) படிவத்தை பூர்த்தி செய்ய தேவையில்லை. அவர்கள், தங்கள் பெயர், முகவரியுடன், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்களை, சங்கத்தின் மூலம், பார் கவுன்சிலுக்கு அனுப்பினாலே, போதுமானது.
