தொழில் துறையினரை ஊக்குவிக்க ‘ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு’
தொழில் துறையினரை ஊக்குவிக்க ‘ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு’
UPDATED : பிப் 23, 2015 12:00 AM
ADDED : பிப் 23, 2015 01:46 PM
சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ‘தினமலர்’ நாளிதழையும், திருப்பூரையும் என்றென்றும் பிரிக்க முடியாது. பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, வளர்ச்சிக்கு தடைகல்லாக இருந்த சாய ஆலை பிரச்னை, தொழிலாளர் பற்றாக்குறை, மின்வெட்டு போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காணச் செய்துள்ளது.
சர்வதேச அளவில் பல நாடுகளில் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கும் தொழில் துறையினர், அதற்கான ஆவணங்களை மிக நேர்த்தியாக தயாரிப்பது அவசியம்; ஆவண பிழை ஏற்படும்போது, மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அதனால், ஏற்றுமதி ஆவணம் தயாரிப்பு குறித்து ஆலோசனை வழங்கும் இலவச வழிகாட்டி கருத்தரங்கு, ‘தினமலர்’ சார்பில், திருப்பூர் அணைப்புதூரில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று நடத்தப்பட்டது.
திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி நிறுவன பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மும்பையை சேர்ந்த, ஏற்றுமதி டாக்குமென்டேஷன் நிபுணர் சேதுராமன் சாத்தப்பன், ஏற்றுமதி ஆவணங்களை நேர்த்தியாக தயாரிக்கும் வழிமுறை; யூ.சி.பி., 600, ஐ.எஸ்.பி.பி., இன்கோ டெர்ம்ஸ் விதிகள் 2010, மாற்றி அமைக்கப்பட்ட ஐ.எஸ்.பி.பி., விதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
‘ஒவ்வொருவரும் ஏற்றுமதியாளராகணும்’
நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் பேசியதாவது:
கடந்த 1977ல் திருப்பூரில் ஏற்றுமதி துவங்கிய காலத்தில், ஏற்றுமதி ஆவண தயாரிப்பு குறித்து எவரும் கற்றுத்தரவில்லை; எல்.சி., (லெட்டர் ஆப் கிரெடிட்) என்றால், என்னவென்றே தெரியாது. ஏற்றுமதியாளர் களாகிய நாங்கள் சுயமாகவே, கற்றுக்கொண்டோம். ஸ்டேட் பாங்க் மேலாளராக இருந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரே, எல்.சி., தயாரிப்பு குறித்த ஷரத்துக்களை கற்றுக்கொடுத்தார்.
ஆவணங்கள் தயாரிப்பில் சிறிய தவறு ஏற்பட்டாலும் கூட, அனைத்தும் வீணாகி விடும்.கடந்த 1985ல், ரூபாய் மதிப்பில் வெறும் 15 கோடி; டாலர் மதிப்பில் 3 மில்லியன் டாலருடன், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் துவங்கியது. நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி வர்த்தகம் ரூ.21 ஆயிரம் கோடியை எட்டும். இதற்கு, ஏற்றுமதியாளர்களின் அயராத உழைப்பும்; தொழிலாளர்களின் ஒத்துழைப்புமே காரணம். இதில், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பங்களிப்பு, நூறு சதவீதம் உள்ளது.
அரசு உதவியை விட, தனியார் பங்களிப்பிலேயே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலிபாளையத்தில் தொழிற்பேட்டை, நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லூரி, ‘கன்டெய்னர் டிப்போ’, கல்விச்சேவைக்காக டீ-பப்ளிக் பள்ளி, நேதாஜி அப்பேரல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வந்து, திருப்பூரின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் மூன்று சீசன்களுக்கான ஆடை மட்டுமே தயாரிக்க முடிகிறது. சிந்தடிக் போன்ற செயற்கை இழை ஆடை உற்பத்திக்காக, ‘நிட்வேர் டெக்னாலஜி’ மிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, இரட்டிப்பாகி விடும்.
திருப்பூரில் பெரிய அளவில் முதலீடு செய்து தொழில் துவங்கியோர் மிக சிலரே. ஒவ்வொரு ஏற்றுமதியாளருக்கும், வெவ்வேறு சரித்திரங்கள் உண்டு.
திருப்பூரில் 3 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன; இதில், 20 எண்ணிக்கையிலான நிறுவனங்களே, பெரிய முதலீட்டில் துவங்கப்பட்டவை. மற்றவர்கள், சிறிய அளவில் இருந்து முன்னேறியவர்கள். உழைப்பையே தாரக மந்திரமாகக் கொண்டு, பின்னலாடை துறை இயங்கி வருகிறது. ஏற்றுமதியாளர்கள் ஆவணங்களை சரியாக தயாரித்து, வளர்ச்சி பெற வேண்டும் என்கிற நோக்கத்தில், ‘தினமலர்’ நாளிதழ், இக்கருத்தரங்கை நடத்துகிறது. இதில் பங்கேற்றிருப்போர், சிறந்த ஏற்றுமதி ஆவண தயாரிப்பு மேலாளராக வேண்டும் என்று மட்டும் நினைக்கக் கூடாது; தெரிவிக்கப்படும் ஆலோசனையை பெற்று, சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக வேண்டும் என உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
‘தவறை திருத்தினால் வெற்றி தேடி வரும்’
கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு, ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்கும் விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அப் புத்தகத்தை சேதுராமன் சாத்தப்பன் வெளியிட, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா சண்முகம் பெற்றுக்கொண்டார்.
ராஜா சண்முகம் பேசியதாவது: பின்னலாடை தொழில் துறை பல்வேறு பிரச்னைகளை சந்தித்தபோது, தொழில் துறையினர் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, ‘வெற்றிப்பாதையில் திருப்பூர்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பின், பிரச்னைகளில் இருந்து மீண்டெழுந்து, வளர்ச்சிப்பாதையில் தொழில் துறை பயணிக்கத் துவங்கியது.
ஆயினும், இதுவரை, தொழில் துறை சார்ந்த அறிவுசார் கருத்தரங்கு நடத்தப்படவில்லை. முதன் முறையாக, ‘தினமலர்’ நாளிதழ், தொழில் துறையினரை தெளிவுபடுத்தும் வகையில், ஏற்றுமதி ஆவணம் தயாரிப்பு குறித்த கருத்தரங்கை நடத்துகிறது. தொழில் துறையினர் வாரத்தில் 6 நாட்கள் உழைக்கின்றனர்; ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுப்பர். ஓய்வு தினம் என்ற போதிலும் கூட, இக்கருத்தரங்கில், மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தெரிந்தும், தெரியாமலும் எப்படி வேண்டுமானாலும் தவறு ஏற்படலாம். தவறுகளை அறிந்து, திருத்திக் கொண்டால், வெற்றி நம்மை தேடி வரும். ஆவணங்கள் தயாரிப்பு வழிமுறைகளை, தொழில் துறையினர் சரியாக பின்பற்ற வேண்டும். ஆவணம் தயாரிப்பு என்கிற ஒருமுகமாக மட்டுமின்றி, தொழில் துறையினர் பல்துறை அறிவை வளர்த்து, தேர்ச்சி பெற வேண்டும். குடும்பம், தொழில் சார்ந்த பங்களிப்போடு, சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சமூக பணிகளில் ஈடுபடும்போது, ஆத்ம திருப்தி கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
