இன்ஜி., கல்லூரி எஸ்.ஸி.,- எஸ்.டி., மாணவர்கள் பரிதவிப்பு
இன்ஜி., கல்லூரி எஸ்.ஸி.,- எஸ்.டி., மாணவர்கள் பரிதவிப்பு
UPDATED : செப் 02, 2015 12:00 AM
ADDED : செப் 02, 2015 10:39 AM
கரூர்
: தமிழகம் முழுவதும்
செயல்படும் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும், எஸ்.ஸி., எஸ்.டி., மாணவர்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கான, ஸ்காலர்ஷிப் வழங்காததால், மாணவர்களுக்கு கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பின், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மற்றும் மேனேஜ்மென்ட் கோட்டா மூலம் நிரப்பப்படுகின்றன. கலந்தாய்வு மற்றும் மேனேஜ்மென்ட் கோட்டாவில் வாய்ப்பு கிடைக்கும், எஸ்.ஸி.,- எஸ்.டி., மற்றும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு, 40 ஆயிரம் ரூபாய், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 70 ஆயிரம் ரூபாய், என, அரசின் சார்பில், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு, ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு முதல், மூன்றாம் ஆண்டு வரை, ஒவ்வொரு கல்லூரிகளிலும், குறைந்தபட்சம், 75 முதல், 100 மாணவர்கள், ஸ்காலர்ஷிப் வாங்குகின்றனர்.
அதன்படி, ஒரு கல்லூரி நிர்வாகத்துக்கு, 75 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை, ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. மே மாதம் துவக்கம் அல்லது, மே மாத இறுதிக்குள், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு, ஸ்காலர்சிப் கிடைத்து விடும். ஆனால், 2014-15ம் ஆண்டு கல்விக்கான, ஸ்காலர்ஷிப் இதுவரை வழங்கப்படாததால், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ள நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 571 இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், 10 அரசு கல்லூரிகள் உள்ளன. தனியார் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் எஸ்.ஸி.,- எஸ்.டி., வகுப்பு மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு, 40 ஆயிரம் ரூபாய், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
கடந்த கல்வி ஆண்டுக்கான, ஸ்காலர்ஷிப் இதுவரை கிடைக்காததால், கல்லூரி நிர்வாகத்துக்கு, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
