UPDATED : செப் 04, 2015 12:00 AM
ADDED : செப் 04, 2015 10:39 AM
திருப்பூரில், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வை, பள்ளி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்.
திருப்பூரில்
சாக்கடை கால்வாய்களில் அடைப்பு, குப்பை தேக்கம் பிரச்னை தீராத
தலைவலியாக உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டும், அதன் விற்பனை தொடர்கிறது. மாநகராட்சி தரப்பில் அவ்வப்போது சோதனை
நடத்தி, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் டம்ளர்,
பைகளை பறிமுதல் செய்து வந்தாலும், அதன் விற்பனையும், பயன்பாடும் குறையவில்லை.
வீசி
எறியப்படும் ஒன் யூஸ் பிளாஸ்டிக் டம்ளர், பைகள் சாக்கடை கால்வாயை அடைத்துக் கொள்கின்றன; காலி டம்ளர்களில் நீர் தேங்கி, டெங்கு நோய் கொசுவை உருவாக்கும் அபாயமும் உள்ளது. மண் வளத்துக்கு
பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பது, எதிர்கால சமுதாயத்துக்கு அவசியமானது.
சென்னையில் உள்ள
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் தேசிய பசுமை படை அமைக்கவும்,
மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொழில்
நகரமான திருப்பூர் மாவட்டத்திலும், இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில்,
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை
முற்றிலும் தவிர்க்க வேண்டும்; துணிப்பை மற்றும் காகிதப்பை பயன்படுத்த,
மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். பிளாஸ்டிக்
விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டி, கட்டுரை,
ஓவியம், விவாதம், நாடகம், வினாடி-வினா போன்றவற்றை நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் மன்றங்கள்,
தேசிய பசுமை படை அமைப்புகளை பள்ளிகளில்
ஏற்படுத்தி, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு குறித்து, பிரசாரம்
செய்யலாம்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, குறிப்பிட்ட தினங்களில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், பிளாஸ்டிக் பயன்பாடு சமுதாயத்துக்கு ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து, மாணவர்கள் மத்தியில் ஆழமான புரிதலை ஏற்படுத்தினால் மட்டுமே, திருப்பூரை பிளாஸ்டிக் பயன்பாடு பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.
