அரசுப்பள்ளியில், சிறப்பு வகுப்புகள்; வாசித்தலில் அசத்தும் குட்டீஸ்
அரசுப்பள்ளியில், சிறப்பு வகுப்புகள்; வாசித்தலில் அசத்தும் குட்டீஸ்
UPDATED : செப் 19, 2015 12:00 AM
ADDED : செப் 19, 2015 10:45 AM
உடுமலை
: பள்ளி
குழந்தைகளுக்கு தமிழ் மொழி வாசிப்பும், பிழையின்றி
எழுதும் திறனும் இன்று ஒரு சவாலாகவே உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் முன்னேற்ற பாதையை அவர்களின் குழந்தை பருவம் முதலே
வழிகாட்டினால் மட்டுமே, இறுதியில் இலக்கை அடைய முடியும் என்பதை
உணர்த்தும் வகையில், சுண்டக்காபாளையம் துவக்கபள்ளி
மாணவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
உடுமலை, சுண்டக்காபாளையம் கிராமத்தில் உள்ள இப்பள்ளியில், 40 குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில், இறைவணக்கக் கூட்டம் முடிந்த பின்னர், மாணவர்கள் குழுவாக பிரிந்து அன்றைய நாளிதழை ஒரு மாணவர் படிக்க,
மற்ற மாணவர்கள் அந்த செய்தியின் சுருக்கத்தை
நோட்டில் எழுதி மற்ற மாணவர்களுக்கு வாசித்துக்காட்டுகின்றனர். இதில், ஒன்று முதல் ஐந்து வரை அனைத்துப்பிரிவு குழந்தைகளும்
உள்ளடங்குகின்றனர்.
குழந்தைகளிடம் ஏற்படுத்தும் ஆர்வம்ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு செய்திகளின் கருத்துகளை சுருக்கி எழுத தெரியாத நிலையில், 4 அல்லது 5 ம் வகுப்பு குழந்தைகள் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். போட்டித்தேர்வு, அரசுத்தேர்வு என தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே நாளிதழை தேடி ஓடும் இன்றைய தலைமுறைகளின் இடையே இந்த முயற்சி குழந்தைகளிடையே பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் எழுதும்
செய்திகளை, ஆசிரியர்களின் உதவியால் ஆங்கிலத்தில்
மொழியெயர்த்து அதனையும் அழகாக வாசிக்கின்றனர். தலைமையாசிரியர் மேனகா மற்றும்
ஆசிரியர் சிவராஜ் ஆகியோர் குழந்தைகளை வழிநடத்தி, அன்றாடம் இச்செயல்பாட்டை மாணவர்களை பின்பற்ற செய்கின்றனர். கற்றலின்
அடிப்படையான எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை பாடப்பிரிவின் ஒரு பகுதியாக
கருதியே பல குழந்தைகளுக்கும் கட்டாயமாக கற்றுத் தரப்படுகிறது.
துவக்கநிலையில்
குழந்தைகளின் அடிப்படை கற்றல் முழுமையாக இல்லாததே கற்றல் குறைபாட்டின்
துவக்கமாகவும் உள்ளது. இதனைக்களைய கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் ஆய்வுகள், தேர்வுகள் என
பலவும் நடத்தப்படுகிறது. இருப்பினும், அத்தகைய
தேர்வுகளில் வெற்றி பெறும் குழந்தைகள் உயர்நிலை வகுப்புகளில் மீண்டும் அடிப்படை
திறன்களில் பின்தங்கியிருப்பது என்ன காரணம் என்பது கேள்விக்குறியே.
இதில் குறிப்பாக,
மாணவர்களின் தமிழ் உச்சரிப்பை மேம்படுத்த
வேண்டும் என்பதில், கல்வித்துறை தீவிரமாக உள்ளது. அதன்
அடிப்படையிலேயே அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் இறைவணக்கம் மற்றும் இடைவெளி
நேரங்களில் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை
தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியது.
இதனால், சில பள்ளிகளிலும் மாணவர்கள் நாளிதழ் படிக்கும் திட்டம் பின்பற்றப்
பட்டது. எனினும், அவ்வாறு ஒரு அறிவிப்பு உள்ளதா என வினா
எழுப்பும் வகையில், இச்செயல்பாடுகள் பல பள்ளிகளில்
முடங்கியுள்ளன. தேர்வுகள் மூலம் மட்டுமின்றி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில்
ஆய்வு மேற்கொள்ளும் சமயங்களில் இச்செயல்பாடு குறித்தும் மாணவர்களை ஆய்வு செய்து,
முழுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
