UPDATED : செப் 23, 2015 12:00 AM
ADDED : செப் 23, 2015 10:23 AM
சேலம்
: சேலம் உள்ளிட்ட, பத்து
மாவட்டங்களில், முதல்கட்டமாக, தலா, பத்து அரசு பள்ளிகள் வீதம் தேர்வு
செய்யப்பட்டு, அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில், அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்திம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒன்பது, பத்தாம் வகுப்புகளில், கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்தவும், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில், இடைநிலைக் கல்வி மாணவர்களிடம், அறிவியல் பாடத்தை முழுமையாக கொண்டு சேர்த்து, அவர்களை அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்க, புகழ்பெற்ற, அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷனனுடன் கை கோர்த்துள்ளது. இதன்படி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, கரூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய, பத்து மாவட்டங்களில், முதல்கட்டமாக, அரசு பள்ளிகளில், அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா, பத்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தொடர்ந்து அகஸ்தியா பயிற்சியாளர்கள், அறிவியல் பாடம் குறித்து, வகுப்பு நடத்துவர். இதில், மாணவர்களிடம் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில், மற்ற பள்ளிகளுக்கும், விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேசன் திட்ட மேலாளர் காயத்ரி நம்மிடம் கூறியதாவது: குழந்தைகளிடம் இயல்பாகவே அறிவியல் குறித்த ஆர்வம் அதிகம். ஒரு அதிசயமான விசயத்தை பார்க்கும் போது, &'ஆ!&' என்ற அதிர்ச்சி ஏற்படும். அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மையை தெரிந்து கொண்டால், ஆஹா என்ற வியப்பு வரும். அதை அவர்களே செய்து பார்க்கும் போது, &'ஹா, ஹா&' என்ற மகிழ்ச்சி ஏற்படும். இவை குழந்தைகளிடம் ஏற்படும் போது, அறிவியல் ஆர்வம் பல மடங்கு அதிகரிக்கும். அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாகவும் உருமாற முடியும். இந்த குறிக்கோள் அடிப்படையில், அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது.
இந்தியா முழுவதும், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில், அரசு பள்ளி மாணவர்களிடம், அறிவியல் நிகழ்ச்சிகளை சேவை அடிப்படையில் நடத்தி வருகிறது. ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில், மிகப்பெரிய அறிவியல் மையம் அமைத்து, தினமும் குறைந்தது,1,000 மாணவ, மாணவியர் பார்வையிட்டு செல்லும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், இந்த அறிவியல் நிகழ்ச்சிகளை குழந்தைகளிடம் கொண்டு செல்ல உள்ளோம். ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடங்களில் உள்ள, கான்செப்ட் மட்டும் பிரித்தெடுத்து, அதை செயல்முறை வடிவமாக மாணவர்களிடம் செய்து காட்டுவோம்.
அதை, மாணவர்களும், மிக எளிதாக, வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே, செய்து காட்டவும் முடியும். இதன் மூலம், அந்தபாடத்தையும், முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இதற்காக, ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை, இளம் வயதிலேயே தூண்டிவிட முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
