காமராஜ் பல்கலையில் ஏமாற்றும் ஏப்ரல் தேர்வுகள்; 30 ஆயிரம் மாணவர் பாதிப்பு
காமராஜ் பல்கலையில் ஏமாற்றும் ஏப்ரல் தேர்வுகள்; 30 ஆயிரம் மாணவர் பாதிப்பு
UPDATED : செப் 25, 2015 12:00 AM
ADDED : செப் 25, 2015 10:41 AM
மதுரை
:
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் இந்தாண்டு ஏப்ரல் தேர்வுகள், ஐந்து மாதங்களாக நடக்காததால் 30 ஆயிரம் மாணவர்கள் குழப்பத்தில்
உள்ளனர்.
தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டிற்கு டிசம்பர் மற்றும் ஏப்ரலில் தேர்வுகள் நடத்தப்படும். ஏப்., தேர்வு எழுத இளங்கலை மற்றும் முதுகலையின் பல்வேறு பாடப் பிரிவுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். மாற்றியமைக்கப்பட்ட தேர்வு முறைப்படி இளங்கலை தேர்வில், 40 மதிப்பெண் பகுதி அப்ஜெக்டிவ் முறையிலும், 30 மதிப்பெண் பகுதி விரிவாக எழுதுதல் மற்றும் 30 மதிப்பெண்ணிற்கு செய்முறை பயிற்சி என மொத்தம் 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை படிப்பு பாடத் தேர்வுகளில், 40 மதிப்பெண் பகுதி மட்டும் ஆன்லைனில் எழுதும் முறை உள்ளது. வழக்கமாக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒன்றாக தான் நடத்தப்படும். தற்போது முதுநிலை தேர்வில், ஆன்லைன் தேர்வு எழுதுவதில் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால், ஏப்ரல் தேர்வுகளை, இன்னும் நடத்த முடியாத நிலையுள்ளது. இதனால், விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள், தேர்வு எப்போது நடக்கும் என குழப்பத்தில் உள்ளனர்.
பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:
தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. முதுநிலை தேர்வில், 40 மதிப்பெண் பகுதியை, அவுட் சோர்ஸ் மூலம் தான் ஆன்லைனில் தேர்வு எழுத முடியும். கடந்தாண்டு இத்தேர்வை நடத்த தனியார் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏதோ காரணத்திற்காக அந்த நிறுவனம் இந்தாண்டு அனுமதிக்கப்படவில்லை.
இதனால், வேறு ஒரு புதிய சாப்ட்வேர் கம்பெனியை தேர்வு செய்ய, முறைப்படி டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் முடிவு தெரியவில்லை. இதுதொடர்பான சில நடைமுறையால் ஏப்., தேர்வுகளை நடத்த முடியவில்லை. துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.
