அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு பூட்டு; நிர்வாகி தலைமறைவு
அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு பூட்டு; நிர்வாகி தலைமறைவு
UPDATED : செப் 26, 2015 12:00 AM
ADDED : செப் 26, 2015 11:06 AM
திருப்புவனம்
:
திருப்புவனத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்ற பெயரில் அங்கீகாரம்
இல்லாத பள்ளி நடத்தி தலைமறைவு ஆனவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகரைச்
சேர்ந்த திருப்புவனம் புதுாரில் பென்னட், ஏஞ்சலினா
தம்பதியினர் தனியார் வாடகை கட்டடத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஹோலிபெல்ஸ்
என்ற பெயரில் பப்ளிக் பள்ளி ஒன்றை தொடங்கினர். குறைந்த கட்டணம்,
பள்ளியிலேயே மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு குறைந்த செலவில்
சாப்பாடு, மாலை சிற்றுண்டி, சீருடை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர்.இந்த
பள்ளியில் 170 மாணவ, மாணவியர் சேர்ந்தனர். ஆசிரியர்களுக்கு 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் எனக்கூறி 2 ஆண்கள், 6 பெண்களை நியமித்துள்ளனர்.
முதல் மாதம் மட்டுமே சம்பளம் வழங்கிய நிலையில் கடந்த 5 மாதங்களாக வழங்கவில்லை. படிப்புக்கட்டணம் செலுத்தியும், மாணவ, மாணவியர்களுக்கு சீருடை, புத்தகம், நோட்டு எதுவும் வழங்கவில்லை. பக்ரத் விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்படவில்லை. பள்ளியை நடத்திய பென்னட், ஏஞ்சலினாவிடம் கேட்ட போது, அக்., 5ல் தான் பள்ளி திறக்கப்படும், எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கட்டடத்திற்கு வாடகை கொடுக்காததால் உரிமையாளர் கட்டடத்தை பூட்டியதாக கேள்விப்பட்டவுடன் பெற்றோர், ஆசிரியர்கள் திரண்டு வந்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடிய போது பள்ளி நிர்வாகி பென்னட் தலைமறை வாகிவிட்டார். அவரது மனைவி ஏஞ்சலினாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகனிடம் கேட்ட போது, மோசடி குறித்து தற்போது தான் புகார் வந்துள்ளது. விசாரணை செய்கிறோம், என்றார். பெற்றோர் சங்கவி கூறுகையில், பள்ளி 11 மணிக்கு தான் தொடங்குவர். சீருடை, புத்தகம் எதுவுமே கொடுக்கவில்லை. மாதத்தில் 10 நாட்கள் லீவு விடுவார்கள். தற்போது தான் அங்கீகாரம் பெறவில்லை என தெரியவந்துள்ளது, என்றார். ஆசிரியை விமலா கூறுகையில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறினர். முதல் மாதம் மட்டும் 5 ஆயிரம் வழங்கினர். 5 மாதமாக சம்பளம் தரவில்லை, என்றார்.
