எம்.பி.பி.எஸ்., படிப்பில் காலியிடங்கள்; தமிழக அரசே நிரப்பி கொள்ளலாம்
எம்.பி.பி.எஸ்., படிப்பில் காலியிடங்கள்; தமிழக அரசே நிரப்பி கொள்ளலாம்
UPDATED : அக் 10, 2015 12:00 AM
ADDED : அக் 10, 2015 10:23 AM
ஒவ்வொரு ஆண்டும், மருத்துவப் படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்களில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 63 இடங்கள்; பி.டி.எஸ்., படிப்பில், ஏழு இடங்கள், தமிழகத்துக்கு, &'சரண்டர்&' செய்யப்பட்டு விட்டன.
இதையடுத்து, மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தயாரித்துள்ள, தகுதி பட்டியலின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை, முதல் கட்டமாக நிரப்ப வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தமிழக சுகாதார துறை மற்றும் மருத்துவக் கல்வி தேர்வு குழு சார்பில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, சசிதரன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
பின்,
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதியின்படி, கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒப்படைக்கப்பட்ட இடங்களை ரத்து செய்து விட்டு, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட தகுதி பட்டியலில் இருந்து, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருப்பதாக கருதக் கூடாது. எனவே, உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களை அல்லது விடுபட்ட இடங்களை, மாநில அரசே நிரப்பி கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
