UPDATED : அக் 15, 2015 12:00 AM
ADDED : அக் 15, 2015 11:01 AM
கிருஷ்ணகிரி
:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க
வாய்ப்பு உள்ளதாக, கலெக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஐ.டி.ஐ., பட்டய படிப்பு, இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். மேலும், தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து, வங்கிகள் அல்லது தமிழ்நாடு முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொடங்கும் தொழில் முனைவோருக்கு, தொழில் திட்ட மதிப்பீட்டு, 25 சதவீதம், அதிகபட்சமாக, 25 லட்ச ரூபாய் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம், 5 லட்ச ரூபாய்க்கு மேலும், அதிகபட்சமாக, 1 கோடி ரூபாய் வரையில், அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் சேவை தொழில் தொடங்கலாம். பொது பயனாளி தனது திட்ட மதிப்பீட்டில், 5 சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர், 21 வயதுக்கு மேல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது, 45 ஆகும். பயனாளி கடந்த, 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
