நாளிதழ் மூலம் வாசிக்கும் பழக்கம்; ஊக்குவித்து உயர்த்தும் அரசு பள்ளி
நாளிதழ் மூலம் வாசிக்கும் பழக்கம்; ஊக்குவித்து உயர்த்தும் அரசு பள்ளி
UPDATED : அக் 19, 2015 12:00 AM
ADDED : அக் 19, 2015 11:02 AM
காஞ்சிபுரம்
: மாணவர்களின்
வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனியில்
உள்ள உயர்நிலைப் பள்ளி, நாளிதழ்களை வாங்கி வைத்து
முன்னுதாரணமாக விளங்குகிறது.
மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்க ஆசிரியர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், பொருளாதார நிலையில் பின்தங்கிய வீடுகளில் இருந்து வரும், மாணவர்கள் வீடுகளில் நாளிதழ்களை வாங்கி படிக்கக்கூடிய சூழல் இல்லாமல் உள்ளனர். அவ்வாறு உள்ள சூழலை போக்கும் விதமாக, ஆட்சியர் காலனியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி, பள்ளி வளாகத்தில்வைக்கின்றனர்.
உணவு இடைவேளையில் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உயர்த்தவும், நாட்டின் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், பள்ளியின் இந்த செயல்பாடு வழிவகை செய்கிறது. இதேபோல், அனைத்து பள்ளிகளும் பின்பற்றினால், மாணவர்களிடையே வாசிக்கும் திறன் உயரும் என, பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் காலனியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் வழங்கும் நிதியில், நாளிதழ்களை வாங்குகிறோம். வாசிப்பு திறன் அதிகரிக்கவும், அறிவை வளர்க்கவும், இது பயன்படும் என்பதாலேயே, இவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம், என்றார்.
