UPDATED : அக் 26, 2015 12:00 AM
ADDED : அக் 26, 2015 11:05 AM
மதுரை
: ஆட்டோவிற்கு குறைந்தபட்ச கட்டணம்
உண்டு; ஆனால் பல்கலை உறுப்பு மற்றும் சுயநிதி கல்லுாரி ஆசிரியர்களுக்கு
நிர்ணயிக்கப்படவில்லை என கல்விக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில், தமிழ்நாடு பல்கலை உறுப்பு கல்லுாரி மற்றும் சுயநிதி கல்லுாரி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் குறித்த மாநில கருத்தரங்கு நடந்தது. தஞ்சை சாஸ்திரா பல்கலை பேராசிரியர் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது: ஆட்டோவிற்கு குறைந்தபட்ச கட்டணம் உண்டு. ஆனால், பல்கலை உறுப்பு மற்றும் சுயநிதி கல்லுாரி ஆசிரியர்களுக்கு இல்லை. ரூ.8 ஆயிரம் சம்பளத்திலும் பணியாற்றுகின்றனர்.
இதுகுறித்து பேராசிரியர் குழு ஆய்வு செய்து அரசு கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். ஆசிரியர்கள் வாழ்வாதாரம் குறித்து ஒரு நபர் கமிஷன் அமைத்து விசாரிக்க அரசு முன்வர வேண்டும், என்றார். மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் குழு உறுப்பினர் வெங்கட்ராமன் பேசுகையில், பல்கலை உறுப்பு மற்றும் சுயநிதி கல்லுாரி ஆசிரியர் நிலை குறித்து உயர் கல்வி செயலர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும், என்றார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உதவி சொலிசிட்டர் ஜெனரல் சுவாமிநாதன், உதவி பேராசிரியர் நாகலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பல்கலை மானியக் குழு பரிந்துரைப்படி, குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
