தனியார் பள்ளி கட்டட விதிமீறல் வரன்முறைக்கு புதிய நிபந்தனை
தனியார் பள்ளி கட்டட விதிமீறல் வரன்முறைக்கு புதிய நிபந்தனை
UPDATED : அக் 26, 2015 12:00 AM
ADDED : அக் 26, 2015 11:19 AM
சென்னை எழும்பூர் தனியார் பள்ளி கட்டட விதிமீறல்களை சரிசெய்ய, பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட, மேல்முறையீட்டு குழு நிபந்தனைகளை விதித்து உள்ளது.
சென்னை, எழும்பூர் காசாமேஜர் சாலையில், டான் பாஸ்கோ பள்ளி வளாகம் உள்ளது. இங்கு, அடித்தளத்துடன் நான்கு தளங்கள் கொண்ட கட்டடம் கட்ட, 2010ல், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால், இந்த அனுமதிக்கு மாறாக, அடித்தளத்தின் ஒரு பகுதி தரைத் தளமாக மாற்றப்பட்டது. மேலும், கட்டடத்தின் பக்கவாட்டு காலி இடம், உயரம் ஆகியவற்றிலும் விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது.
விதிமீறல்களை வரன்முறை செய்ய கோரி, பள்ளி நிர்வாகம், தமிழக அரசிடம் முறையிட்டது. பள்ளியின் மனு, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், வீட்டுவசதி துறை செயலர், நகரமைப்பு துறை, நகராட்சி நிர்வாக துறை இணை ஆணையர் ஆகியோரை கொண்ட மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது. அண்மையில் நடந்த, இந்த குழு கூட்டத்தில் டான் பாஸ்கோ பள்ளி கட்டட விதிமீறல் குறித்து, விவாதிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பள்ளி நிர்வாகத்துக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
புதிய கட்டடத்தில், விதிகளை மீறி, அமைக்கப்பட்ட சுற்றுச் சுவரை இடிக்க வேண்டும்; தரை தள பகுதியை திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ளபடி மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் தான், கட்டடத்தில் பக்கவாட்டு காலி இடம், உயரம் தொடர்பான விதிமீறல்களை வரன்முறைப்படுத்துவது குறித்து ஆராய, கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
