பல்கலை மெத்தனத்தால் முடங்கிய வெளிமாநில மாணவர்கள் சேர்க்கை!
பல்கலை மெத்தனத்தால் முடங்கிய வெளிமாநில மாணவர்கள் சேர்க்கை!
UPDATED : டிச 19, 2015 12:00 AM
ADDED : டிச 19, 2015 11:01 AM
தொலைநிலைக் கல்வி முறையால் பிற மாநில பல்கலையில் சேர்ந்து படிக்கும் வசதியுடன், அம்மாநிலத்தில் உள்ள பல வகை பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்பும் கிட்டும். பெரும்பாலான பல்கலைகளில், வெளிமாநில சேர்க்கையில் தொடர்ந்து முறைகேடு புகார் எழுந்ததால், பல்கலைகள் அந்த மாநில எல்லைக்குள் உட்பட்டவர்களுக்கு தான் சேர்க்கை வழங்க வேண்டும். பிறமாநில மாணவர்களை சேர்க்க கூடாது, என, சில மாதங்களுக்கு முன் பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) உத்தரவு பிறப்பித்தது.
இதனால், தமிழகத்தில் தொலைநிலைக் கல்வி வசதி உள்ள பல்கலைகள் அதிர்ச்சியடைந்தன. அதேநேரம், திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார், சிதம்பரம் அண்ணாமலை போன்ற பல்கலைகள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, யு.ஜி.சி., உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்று, நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடத்துகின்றன.ஆனால், ஆண்டுதோறும் பல ஆயிரம் வெளிமாநில மாணவர்கள் சேர்க்கையாகும் மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தர் இல்லாததால், நீதிமன்றத்தை நாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வெளிமாநில மாணவர் சேர்க்கை முடங்கியுள்ளது.
இதுகுறித்து
பேராசிரியர்கள் கூறியதாவது:
இப்பல்கலை தொலைநிலைக் கல்வியில் ஒரு லட்சத்திற்கும்
மேல் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் வெளிமாநிலத்தவர் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். தமிழகத்தில் பிற பல்கலையை
ஒப்பிடுகையில் இங்கு தான் அதிக எண்ணிக்கையிலான பாடப் பிரிவுகளும் உள்ளன.
இதனால், வெளிமாநில மற்றும் பிற நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர் சேர்க்கை நடக்கும். யு.ஜி.சி.,யின் உத்தரவு எதிர்பாராத ஒன்று தான். ஆனால் அதை பிற பல்கலைகள் எதிர்த்து நீதிமன்றம் சென்று, தற்போது சேர்க்கையை நடத்துகின்றன. ஆனால், இங்கு துணைவேந்தர் இல்லை. இதனால் கன்வீனர் கமிட்டி இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.
