விடைத்தாள் மதிப்பீடு; பெங்களூரு பல்கலை மீது பரபரப்பு புகார்
விடைத்தாள் மதிப்பீடு; பெங்களூரு பல்கலை மீது பரபரப்பு புகார்
UPDATED : டிச 28, 2015 12:00 AM
ADDED : டிச 28, 2015 10:32 AM
பெங்களூரு
: பெங்களூரு
பல்கலைக்கழகம், 10 மாணவர்களின் விடைத்தாள்களை, நான்காவது முறையாக மதிப்பீடு செய்துள்ளது. இதன் மூலம் விதிகளை
பல்கலைக்கழகம் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூருவின் பல்வேறு கல்லுாரிகளின், 10 மாணவர்கள், 2014 நவம்பர், 2015 ஜனவரி மற்றும் மே மாதம் தேர்வு எழுதினர். குறைந்த மதிப்பெண் வந்ததால், 10 மாணவர்களும், ஒவ்வொரு பாடத்தில், மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்தனர்.
மதிப்பீட்டில் ஒரு மாணவர், 35 மதிப்பெண் பெற்றிருந்தார். மற்றவர்கள் அதை விட குறைவான மதிப்பெண் பெற்றிருந்தனர். மறு மதிப்பீட்டில் இவர்களுக்கு நான்கைந்து மதிப்பெண் கூடுதலாக கிடைத்தது.பின், பல்கலைக்கழகம், 3வது முறையாக மறு மதிப்பீடு செய்ய வாய்ப்பளித்தது. இப்பணியை அந்தந்த கல்லுாரிகளின் விரிவுரையாளர்களே மேற்கொண்டனர். 3வது முறையாக மதிப்பீடு செய்ததில், மாணவர்கள் குறைந்தபட்சம், 35 முதல், அதிகபட்சம், 75 வரை மதிப்பெண் பெற்றனர். 3வது மதிப்பீட்டில் அதிக அளவில் வித்தியாசம் தென்பட்டதால், 4வது முறையாக மதிப்பீடு செய்யும்படி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
இதில் மூன்று மாணவர்கள், 35க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தனர். 7 மாணவர்கள், 3வது மதிப்பீட்டை விடஅதிகமான மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த மதிப்பெண் குளறுபடி விவகாரம், கடந்த மாதம், 19ம் தேதி நடந்த சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 4வது மதிப்பீட்டில், மாணவர்கள் பெற்றிருந்த சராசரி மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ள, கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. மூன்று மாணவர்களுக்கு அனுகூலமாக்கித்தரும் நோக்கில், பல்கலைக்கழக அதிகாரிகள், விதிகளை அலட்சியப்படுத்தியுள்ளதாக, சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் அதிருப்தி தெரிவித்தார்.
பல்கலைக்கழக விதிப்படி, பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு விடைத் தாள்களை, அதிகபட்சம், 3 முறை மட்டுமே, மறு மதிப்பீடு செய்யலாம். அதற்கு மேல் மதிப்பீடு செய்ய வாய்ப்பில்லை. விடைத்தாள் மதிப்பீடு செய்த பின், மாணவர்கள் விண்ணப்பித்தால், மறு மதிப்பீடு செய்யப்படும். மறு மதிப்பீட்டில், 15 சதவீதம் வித்தியாசம் இருந்தால், தேர்வு ஆணையத்தின் மதிப்பீட்டாளர்கள் மூலம், 3வது முறையாக மதிப்பீடு செய்யப்படும் என்று சிண்டிகேட் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
