UPDATED : ஜன 14, 2016 12:00 AM
ADDED : ஜன 14, 2016 02:07 PM
புதுச்சேரி: புதுச்சேரி கல்வித் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேண்டு இசைக்கும் போட்டி நடத்தப்பட்டது.
குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை அறியும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி தேசிய அளவில் பரிசுகள் வழங்க, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துளளது. அதன்படி, புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேண்டு இசைக்குழு போட்டி, ஜவகர் சிறுவர் இல்லத்தில் நேற்று காலை நடந்தது.
மாநில பயிற்சி மைய சிறப்புப் பணி அலுவலர் ரங்கநாதன் துவக்கி வைத்தார். பயிற்சி மையத்தின் விரிவுரையாளர் பூபதி வரவேற்று, போட்டி தொடர்பான விவரங்களை விளக்கினார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து 120 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி தேசிய மாணவர்படை அமைப்பின் தலைமை அலுவலக அதிகாரிகள், நடுவர்களாக இருந்து சிறந்த பேண்டு வாசிக்கும் குழுவை தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியில் வட்ட ஆய்வாளர் குமார், உடற்கல்வி விரிவுரையாளர் சுப்ரமணி, விரிவுரையாளர் ஆரோக்கியதாஸ், ஆசிரியர் அசோக் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர்.
