UPDATED : மார் 18, 2016 12:00 AM
ADDED : மார் 18, 2016 11:05 AM
கிருஷ்ணகிரி
:
வேப்பனஹள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி.
இவரது மகள் ரஞ்சிதா, 15. இவர், வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். இவருக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொடுக்கவில்லை. பல நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்ததால், ரஞ்சிதாவை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என, ஆசிரியர்கள் கூறி விட்டனர். அதிர்ச்சியடைந்த மாணவி மற்றும் அவரது தந்தை, இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், மாணவி ரஞ்சிதா கடந்த, மூன்று மாதங்களாக பள்ளிக்கு வராதததால், அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என, பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறைக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்த போது, ரஞ்சிதாவை வரும், 22ம் தேதி நடக்கும் ஆங்கில முதல் பாட தேர்வில் இருந்து, மற்ற பாடங்களுக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும், தேர்வு முடிவு வெளியாகி, உடனடியாக நடக்கும் தேர்வில், ரஞ்சிதா தமிழ் முதல்பாடம் மற்றும் இரண்டாம் பாட தேர்வை எழுதி கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
