UPDATED : மார் 19, 2016 12:00 AM
ADDED : மார் 19, 2016 10:57 AM
சேலம்
: பிளஸ் 2 கணிதத்தேர்விலும், கடினமான கேள்விகளும், எதிர்பாராத கேள்விகளும் கேட்கப்பட்டதால், மாணவ, மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.
நடப்பு கல்வியாண்டில், தேர்ச்சி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று கணிதத்தேர்வு நடந்தது. ஏற்கனவே நடந்த வேதியியல் தேர்வு கடினமாக கேட்கப்பட்டிருந்ததால், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், கணிதத்தில் எளிதாக கேட்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியரிடையே இருந்தது.
ஆனால், இதற்கு மாறாக, கணிதத்திலும், எதிர்பாராத வினாக்களும், கிரியேடிவ் வினாக்களும் இடம்பெற்றிருந்தது. வழக்கமாக கேட்கப்படும் வினாக்கள் மிக குறைவாக இடம்பெற்றதால், சராசரி மாணவர்கள், தேர்ச்சி பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதனால், பிளஸ் 2 மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து
முதுகலை கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
தமிழ்வழி வினாத்தாளில், 6 மதிப்பெண் வினாக்களில் ஒன்றான 43வது வினாவில், மதிப்பீடு கொடுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக என்ற கோட்டிற்கும் என்ற வார்த்தை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவை விடுபட்டுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அச்சுப்பிழை காரணமாக, இவ்வினாவுக்கு மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. சராசரி மாணவர்கள், அனைத்து கணக்குகளிலும், பயிற்சி பெற இயலாது என்பதால், குறிப்பிட்ட, அடிக்கடி கேட்கப்படும் வழக்கமான கணக்குகள் தேர்வு செய்து, பயிற்சி எடுப்பது வழக்கம்.
இம்முறை, அதுபோன்ற வழக்கமான வினாக்கள் மிகக்குறைவாகவே இருந்தது. இதனால், பாடத்தை முழுமையாக கற்காமல், ஒரு சில பாடங்களை மட்டுமே படித்து, தயாராகியிருந்த மாணவர்கள், தேர்ச்சி பெறுவது கடினம். கடந்த ஆண்டை காட்டிலும், சென்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், தேர்ச்சி விகிதம் கணிதத்தில் நிச்சயம் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
