UPDATED : மார் 21, 2016 12:00 AM
ADDED : மார் 21, 2016 11:09 AM
திருப்பூர்
: புதிய
பயிற்சி ஏடுகளை தயாரிப்பது குறித்து, சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு,
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், மாவட்டம் வாரியாக, 40 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, இப்பயிற்சி தரப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் துறை சார்ந்த ஆசிரியர்கள் பங்கேற்பர். அனுபவமிக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள் மற்றும் கருத்தாளர்கள், பயிற்சி தர உள்ளனர்.
வரும் கல்வியாண்டில், சமூக அறிவியல் பாடத்தில் கற்பனை திறனை அடிப்படையாகக் கொண்டு, மாணவ மாணவியர் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக வரலாறு, புவியியல் மற்றும் சூழ்நிலையியல் சார்ந்த பாட விளக்கங்களை, பயிற்சி ஏடுகளாக தயாரிக்க, இம்முகாம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தங்களது கற்பனை திறன், பயிற்சி ஏடு தயாரிப்பில் புது முயற்சி என, ஆர்வத்தையும், திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் கூறுகையில், தற்போது பொதுத்தேர்வு நடந்து வருவதால், ஆசிரியர்கள் அப்பணியில் மும்முரமாக உள்ளனர். தேர்வுப்பணி பாதிக்காதவாறு, இடையிடையே இரண்டு நாட்கள் வீதம், இப்பயிற்சி முகாம், 10 நாட்கள் நடக்கும். பயிற்சி ஏடுகளை தயாரிப்பதில், ஆசிரியர்களின் முனைப்பு திறன், கற்பனை வளம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக, இம்முகாம் நடத்தப்படும், என்றார்.
