UPDATED : மார் 24, 2016 12:00 AM
ADDED : மார் 24, 2016 11:13 AM
சென்னை பல்கலையின் இந்திய வரலாற்று துறைக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும், என யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலையின், இந்திய வரலாற்றுத் துறையின் நுாற்றாண்டு விழாவையொட்டி, இரண்டு நாள் சிறப்பு கருத்தரங்கம், நேற்று துவங்கியது. இதில், யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது:
பல்கலையின், ஒரு துறை, 100 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது என்றால், அது எவ்வளவு பெரிய சாதனை. எதிர்காலத்தில், மூன்று வகை வளர்ச்சிகளை எதிர்பார்க்கிறோம். வரலாறு தொடர்பான அறிவை வளர்ப்பது; அதை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தேவையான சர்வதேச மொழித் திறனை வளர்த்தல்; ஆராய்ச்சி மூலம் பெற்ற அறிவைப் பாதுகாப்பது என, முக்கிய கடமைகள் உள்ளன.
நிதியுதவி
:
இந்தியாவில், வரலாறு, சமூக அறிவியலுக்கு அதிக அளவில், துறை வல்லுனர்கள் இல்லை. எனவே, இளைய தலைமுறையில் அறிஞர்களை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த அடிப்படையில், இந்திய வரலாற்றுத் துறைக்கு, யு.ஜி.சி.,யின் தனி நிதி உதவிகள் கிடைக்கும் வகையில், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். முக்கிய இடம்:தொல்லியல் துறை, ஊடகவியல் மற்றும் தென்னிந்திய படிப்புகள் துறை ஆகியவற்றை, இந்திய வரலாற்றுத் துறையுடன் இணைத்தால், சிறப்பு அந்தஸ்து வழங்க, யு.ஜி.சி., தயாராக உள்ளது.
இதேபோல், கனெக்ட் இந்தியா என்ற திட்டத்தில், வெளிநாட்டு மாணவர்களை, இந்தியாவுக்கு கொண்டு வந்து, அவர்களை பல்கலை அருகிலுள்ள வீடுகளில் தங்க வைத்து, இந்திய கலாசாரம் கற்றுக் கொடுக்கும் திட்டத்துக்கும், யு.ஜி.சி., உதவ தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் சுதர்ஷன் ராவ் பேசுகையில், வரலாற்றை ஆழமாகப் படிக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தை ஒட்டிய வரலாறு, மன்னர் ஆட்சியில் அதிக நாடுகளை வென்றவர் யார் என்று மட்டும் படிக்காமல், இனம், மதம் கடந்து விரிவாகப் படிக்க வேண்டும்.
எதிர்காலத்தில், இன்றைய வரலாறு முக்கிய இடம் பிடிக்கும் என்பதை எண்ண வேண்டும், என்றார். நிகழ்ச்சியில், வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் வரவேற்றார்.
