UPDATED : மே 11, 2016 12:00 AM
ADDED : மே 11, 2016 10:39 AM
உடுமலை:
பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள, 24 பள்ளி
வாகனங்களுக்கு, 7 நாட்களுக்குள் குறைகளை சரிசெய்யக்கோரி, வட்டார
போக்குவரத்து அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
முறையான
பாதுகாப்பு வசதி இல்லாத வாகனங்கள்,
பராமரிப்பு இல்லாத வாகனங்களால் விபத்து
ஏற்படுவதை தவிர்க்க, ஆண்டுதோறும், மே மாதத்தில் பள்ளி வாகனங்ளுக்கு சிறப்பு ஆய்வு நடத்தப்படுகிறது.
இது குறித்து
வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும், குறிப்பிட்ட நாட்களில் வாகன ஆய்வு
நடக்கும் என்பது தெரியப்படுத்தப்படும். ஒரே நாளில் அனைத்து வாகனங்களும் ஆய்வு
செய்யப்பட்டு, பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளவற்றுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும்.
அவர்கள் அடுத்த, 7 நாட்களுக்குள் குறைகளை சரிசெய்து, மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும். இதனை மோட்டார் வாகன ஆய்வாளர் பரிசோதித்து சான்றிதழ் கொடுப்பார்.
உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு நேற்று நேதாஜி மைதானத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி தலைமையில் நடந்தது. பள்ளி வாகனங்களில், பிரேக், கை பிரேக், அவசரகால வழி, தீயணைப்பான்கள், முதலுதவிப்பெட்டி, மாணவர்கள் உட்காரும் சீட், பேக் வைக்குமிடம், வாகனத்தின் கீழ் தளம், கண்ணாடி, ஜன்னல், கதவு, வாகனங்களில் பள்ளி பெயர், முகவரி மற்றும் நம்பர் எழுதப்பட்டுள்ளதா எனவும், வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறதா என அனைத்தும் சரியாக உள்ளதா என ஆய்வில் பரிசோதிக்கப்படுகிறது.
இதுகுறித்து உடுமலை வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி கூறுகையில், உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட பள்ளிகளிலிருந்து, 105 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், 24 வாகனங்களில், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறைகள் உள்ளதால், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த, 7 நாட்களுக்குள் குறைகளை சரிசெய்து மீண்டும் அலுவலக ஆய்வுக்கு கொண்டுவர வேண்டும், என்றார்.
ஆய்வில், தாராபுரம்
வட்டார போக்குவரத்து அலுவலர் பாலசுப்ரமணியன், உடுமலை கோட்டாட்சியர் சாதனைக்குறள், டி.எஸ்.பி., விவேகானந்தன்
ஆகியோர் பங்கேற்றனர்.
