பள்ளிகளை மூடக்கோரிய மனு; அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்!
பள்ளிகளை மூடக்கோரிய மனு; அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்!
UPDATED : ஜூன் 02, 2016 12:00 AM
ADDED : ஜூன் 02, 2016 10:25 AM
தற்காலிக அங்கீகாரம் பெற்று இயங்கும், 746 பள்ளிகளை மூடக் கோரியும், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க உத்தரவிடக் கோரியும், &'மாற்றம் இந்தியா&' அமைப்பின் இயக்குனர் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், எந்தெந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது என்பது பற்றி பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, ஜூன், 30 வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், என்றார்.
மனுதாரர் நாராயணன், 746 பள்ளிகளின் பட்டியலையும் வெளியிட வேண்டும். 2004ல் இருந்து, 12 ஆண்டுகளாக, இப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்,என்றார்.
இதைத்தொடர்ந்து
நடந்த வாதம் வருமாறு
:
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்: இப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கின்றனர்?
மனுதாரர் நாராயணன்: ஐந்து லட்சம் மாணவர்கள்.
தலைமை நீதிபதி: பள்ளிகளை மூடி விட்டால், இவர்கள் எங்கு செல்வர்?
மனுதாரர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
தலைமை நீதிபதி: அங்கும் இடம் இல்லாவிட்டால்?
மனுதாரர்: இது, அரசின் கடமை.
தலைமை நீதிபதி: பள்ளிகளை மூட உத்தரவிட்டால், பல லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுவர். நடைமுறைக்கு சாத்தியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வாதம் நடந்தது.
பின், நீதிபதிகள், தகுந்த நடவடிக்கைகள் எடுக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோரியுள்ளார். எனவே, வழக்கு விசாரணை, ஜூலை, 19க்கு தள்ளிவைக்கப்படுகிறது என, உத்தரவிட்டனர்.
மேலும், இப்பள்ளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும், இத்துடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டனர்.
