UPDATED : ஜூன் 02, 2016 12:00 AM
ADDED : ஜூன் 02, 2016 10:43 AM
கவுகாத்தி
:
அசாம் மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடத்தும் பள்ளியில் படித்த முஸ்லிம் மாணவன், 10ம் வகுப்பு தேர்வில், மாநிலத்திலேயே, முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளான்.
வட கிழக்கு மாநிலமான அசாமில், பா.ஜ.,வை சேர்ந்த சர்பானந்தா சோனவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கவுகாத்தி நகரில் உள்ள ஓட்டலில், மாதம், 5,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்பவர், அஜ்மல் உசேன். இவர் மகன், சர்பராஸ் உசேன், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம், தேர்வு முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில், 600க்கு, 590 மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே முதல் மாணவனாக சர்பராஸ் உசேன், தேர்வு பெற்றான். சர்பராஸின் உயர் படிப்புக்கு உதவுவதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில கல்வித்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா நிருபர்களிடம் கூறுகையில், முதல் மாணவனாக தேர்வு பெற்ற, சர்பராஸ் உசேனின் மேல் படிப்புக்காக, வங்கியில், ஐந்து லட்சம் ரூபாயை, மாநில அரசு டிபாசிட் செய்யும். மேல் படிப்புக்கான அனைத்து செலவுகளையும், அரசு ஏற்கும், என்றார்.
