தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசிப்பு திருவிழா சென்னை புத்தக கண்காட்சி!

வாசிப்பு திருவிழா சென்னை புத்தக கண்காட்சி!

வாசிப்பு திருவிழா சென்னை புத்தக கண்காட்சி!


UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM

ADDED : ஜூன் 03, 2016 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM ADDED : ஜூன் 03, 2016 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழில் கலை, இலக்கியம், வரலாறு சார்ந்த ஆய்வு தளங்களில், தற்போது பெரும் தேக்கநிலை நிலவுவதாக, பதிப்பக உலகம் கூறுகிறது. பாரதி புத்தகாலயம் க.நாகராஜ் கூறியதாவது: 

தமிழில் வரலாறு, கலை, இலக்கியம் சார்ந்த நுால்கள் அதிக அளவில் வரவேற்கப்படுகின்றன. காரணம், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், அறிவியலை முதன்மை பாடமாக எடுப்பதற்கு பதில், வரலாறு, சமூகவியல் சார்ந்த பாடங்களை தேர்ந்தெடுக்கின்றனர். போட்டித் தேர்வுகளை தமிழில் எழுது வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதும் இதற்கு காரணம்.

ஆனால், தமிழ் அச்சு ஊடகத்தின் வருகையிலிருந்து, 1980 வரை, கே.கே.பிள்ளை போன்றோரால்,தமிழகம் குறித்த வரலாற்று நுால்கள், தமிழில் எழுதப்பட்டன. பின், வரலாற்றுத் துறையில் பெரும் தேக்கநிலை உருவாகியுள்ளது.

இந்தியா, தமிழகம் சார்ந்த கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, கலாசாரம் குறித்த நுால்கள் பெரும்பாலும், வெளிநாடு, வடஇந்திய அறிஞர்களால் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, நொபுரு கரஷிமா, செண்பகலெட்சுமி, ஆர்.எஸ்.சர்மா, சதீஸ் சிந்திரா, ரெமீலா தாப்பர், தீபன் சந்திரா உள்ளிட்டோரின் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வு நுால்கள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தற்போது, தமிழில் ஆய்வு நுால்களை தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் தான் நிலவுகிறது. என்றாலும், ஒரு சிலரால் அவ்வப்போது, சிறந்த முயற்சி களும் எடுக்கப்படுகின்றன.

பாரதி புத்தகாலயம், எதிர் வெளியீடு, புலம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு உள்ளிட்ட சில பதிப்பகங்கள், தமிழ் ஆய்வு நுால்களை பதிப்பிப்பதில், முக்கிய பங்காற்றி வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

குழந்தைக்கு வழிகாட்டலே தேவை;
போதனைகள் அல்ல
 

குழந்தைகளுக்கான படைப்புகளில் முத்திரை பதித்து வரும், எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ, தமிழில் குழந்தை இலக்கியத்தின் தற்கால நிலை குறித்து கூறியதாவது:

குழந்தை இலக்கியங்கள், தற்போது குறைந்துள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன், சிறுவர்களுக்கான மாத இதழ்கள், 40க்கும் குறையாமல் வெளிவந்தன. நுாற்றுக்கும் அதிகமான படைப்பாளிகள் குழந்தைகளுக்கான இலக்கியங்களை எழுதினர்.

தற்போது குழந்தை இலக்கிய சூழலில், வறட்சி ஏற்பட்டுள்ளது. காணொலி ஊடக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், குழந்தைகளை வாசிப்பு பழக்கத்திலிருந்து துண்டித்துள்ளது, அதற்கான காரணங்களில் ஒன்று.

அதற்கான பொறுப்பை, பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களே ஏற்க வேண்டும். ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளில், நிலைமை சற்று மேன்மை அடைந்து வருவது, ஆறுதல் அளிக்கிறது.

குழந்தைகளிடம், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கடமை, பெற்றோருக்கே உண்டு. குழந்தைகளின் வாசிப்பு, அவர்களுக்குள் தேடலை உருவாக்கும். தேடல் கற்பனையாக வளரும்.

குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை, அவர்களையே தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். அந்த ஊக்குவிப்பு, தன்னம்பிக்கையை வளர்க்கும். தன்னம்பிக்கை, தலைமை ஏற்கும் பண்பாக உருமாறும்.

குழந்தைகளுக்கு தேவையானது, பரிவும், வழிகாட்டலுமே தவிர, போதனை குறிப்புகள் அல்ல என, அன்னி சுலிவன் கூறியுள்ளார்.

அதன்படி, நீதிக் கதைகள், பொது அறிவுப் புத்தகங்களால் மட்டுமே, நல்ல பிள்ளைகளை உருவாக்கிவிட முடியாது. இன்றைய இளம் சிறார்களிடம் கற்பனை வளர்ச்சி அதீதமாக உள்ளது.

கருணை, தயை, விட்டுக்கொடுத்தல், அன்பு ஆகிய பண்புகளை முன்னிலைப் படுத்தும் புனை கதைகள் மற்றும் கற்பனைக் கதைகளை வாசிக்கத் துாண்ட வேண்டும்.

சிறுவர் இலக்கியத்தில், இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருப்பவை, ரஷ்ய இலக்கியங்கள் தான். என்னை, சிறுவர்களுக்காக எழுதத் துாண்டியவைகளில் முக்கியமானவை, ஆலிசின் அற்புத உலகம், மகிழ்ச்சியான இளவரசன், ஹான்ஸ் ஆண்டர்சன் கதைகள், குட்டி இளவரசன், டோட்டோசான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி, லியோ டால்ஸ்டாய் கதைகள், ஜங்கிள் புக், பினாச்சியோ, கறுப்பழகன் போன்றவை தான்.

அழ.வள்ளியப்பா, பெ.துாரன், வாண்டுமாமா மற்றும் பூவண்ணன் போன்ற சிறுவர் இலக்கிய படைப்பாளிகளின் பாடல்கள், நாடகங்கள், படக் கதைகள், தமிழில் முக்கியமான சிறுவர் இலக்கியங்களாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தற்கால குழந்தை எழுத்தாளர்கள்

யூமா வாசுகிஆயிஷா நடராசன் தேவிகாபுரம்  வாகொ.மா.கோதண்டம், தங்கப்பா கமலவேலன் த.வி.வெங்கடேஸ்வரன் உதய சங்கர் எஸ்.ராமகிருஷ்ணன் விழியன் விஷ்ணுபுரம் சரவணன் ஆதி.வள்ளியப்பன் ஏற்காடு இளங்கோ எஸ்.பாலபாரதிசுகுமாரன் எஸ்.சுஜாதாயுவராஜன் கம்பீரன். கவுரி நீலமேகம் மு.முருகேஷ்கன்னிகோவில் ராஜாசிவபாரதிரமேஷ் வைத்யாமருதன்

சிறுவர் இலக்கியம் வளம் பெற!

  • பள்ளிகளில், கதை நேர வகுப்புகள் துவக்க வேண்டும். அதில், கதை சொல்லுதல், எழுதுதல் உள்ளிட்ட திறமைகளை வளர்க்க வேண்டும்
  • நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து, பள்ளி அளவிலான பத்திரிகை, கையெழுத்து பிரதியாக வெளியிட வேண்டும்
  • பூங்கா, கடற்கரை, சமுதாயக் கூடங்களில் மட்டுமின்றி, எல்லா இடங்களிலும், குழந்தைகளுக்கான கதை சொல்லும் வெளியை உருவாக்க வேண்டும்
  • குழந்தைகள் கொண்டாடும் விதத்தில், பல தரமான நுால்களை மலிவு விலையில் பதிப்பிக்க பதிப்பகங்கள் முன்வர வேண்டும்
  • சிறந்த சிறுவர் எழுத்தாளருக்காக, தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.

இளங்கோவின் நுால்கள் சில

நுால் பதிப்பகம்

மந்திரக் கைக்குட்டை, ஜிமாவின் கைபேசி, எட்டுக்கால் குதிரை புக்ஸ் பார் சில்ரன்-, பாரதி புத்தகாலயம்.

குட்டி டாக்டர் வினோத் ராஜேஸ்வரி புத்தக நிலையம் ஆயிரங்கால் பூச்சி பாலா பதிப்பகம் தேனென இனிக்கும் தீஞ்சுவை கதைகள் பிரபாத் புக் ஹவுஸ்.

சிறு வயதில் இருந்தே ஆர்வம்

என் அப்பாவின் மூலம், சிறு வயதிலேயே வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. வரலாற்று நாவல்களை அதிகம் படிப்பேன். கல்கி, சாண்டில்யன், சுஜாதாவின் எழுத்துகளை வாசித்துள்ளேன். வாசிக்க வேண்டும் என்பதற்காக, டிவி பார்க்கும் நேரத்தை குறைத்துவிட்டு, நுாலகங்களுக்கு செல்வேன். உடன் என், 12 வயது மகன் ஹர்ஷத்தையும் அழைத்து செல்வேன். அவனும், நல்ல

வாசகனாக வளர்ந்துள்ளான். மகனுக்காக நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உள்ளேன்.உமாசந்த், 35மனோதத்துவ நிபுணர், மதுரை. 

மீண்டும் குழந்தைகளுடன் வருவேன்

என் அப்பாவிடம் இருந்து, புத்தகம் வாசிக்கும் பண்பைசிறு வயதிலேயே பெற்றேன். எனக்கு ஆன்மீகம், வரலாறு,தந்திர படக்கதைகள் பிடிக்கும். பாலகுமாரன், சுஜாதா,கல்கியின் நுால்கள் விருப்பம். மகன்கள் கவுதம் பாலா, மனோஜ் ஆகியோருக்கு காமிக்ஸ் புத்தகங்களை இப்போது வாங்கி செல்கிறேன். 

என் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை அவர்களையே தேடி எடுக்கச் செய்கிறேன். அதனால், அவர்களுக்கு வாசிப்பில் ஆர்வம் கூடியுள்ளது. அதனால் மீண்டும் இங்கு வர வேண்டும் என கூறுகின்றனர்.பூர்ணிமா, 45சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us