தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டசபை கோரிக்கைகளை சட்டசபை நிறைவேற்ற வேண்டும்

பட்டசபை கோரிக்கைகளை சட்டசபை நிறைவேற்ற வேண்டும்

பட்டசபை கோரிக்கைகளை சட்டசபை நிறைவேற்ற வேண்டும்


UPDATED : ஜூன் 06, 2016 12:00 AM

ADDED : ஜூன் 06, 2016 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2016 12:00 AM ADDED : ஜூன் 06, 2016 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 பட்டசபையில் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை, சட்டசபையில் நிறைவேற்றினால், பள்ளிக் கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்படும், என, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் டி.ரவிக்குமார் பேசினார். 

தினமலர் நாளிதழின் மாணவர் இதழான பட்டம் சார்பில், சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில், மாணவர்கள் பங்கேற்ற பட்டசபை என்ற கல்விக்கான, மாதிரி சட்டசபை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், தினமலர் நாளிதழ் துணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் டி.ரவிக்குமார், பட்டம் இதழ் ஆலோசகர் ஞாநி, பட்டம் இதழ் ஆசிரியர் ரமேஷ் வைத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

வணிகமாக்க வேண்டாம் நிகழ்ச்சியில், டி.ரவிக்குமார் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில், பஞ்சாயத்து யூனியன் பள்ளி முதல், சர்வதேச பள்ளி வரை அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு மதிப்பெண் சுமையை குறைத்து, &'கிரேடு&' முறை கொண்டு வருவது பற்றி பேசினர். பல மத்திய அரசு பள்ளிகளில் அந்த முறை உள்ளது. கற்பனை, சிந்தனை திறன் அற்ற கல்வியை பல மாணவர்கள் விமர்சித்தனர்.

கழிப்பறைகள் பற்றி பல மாணவர்கள் பேசினர்.உலக வங்கி குழுவின் தமிழக ஆய்வில், பல பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்று தெரியவந்தது. உலக சுகாதாரத்துறை அறிக்கையில், கழிப்பறைகள் இல்லாததால் தான், இளம்பெண்களில் பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதாக கூறியுள்ளது.

நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, மாணவியருக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும்; நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்களை கழிப்பறைகளில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தேன் அதைக் கேட்டு, பல எம்.எல்.ஏ.,க்கள் சிரித்தனர்; ஆனால், பெண் எம்.எல்.ஏ.,க்கள், பாராட்டினர். ஒரு மேதை சொன்னது போல, அரசியல், அயோக்கியர்களின் கூடாரம் இல்லாதிருக்க, சிந்திக்கும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அனைவரும் அதிகாரத்தை அடைய வேண்டும். அதற்கான வழிகாட்டியாக தலைவர்கள் மாற வேண்டும்.

அரசு பள்ளிகளில் நல்ல கட்டமைப்பு, அதிக ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் இருந்தும், அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வராதது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இன்றைய சூழலில், தனியார் பங்களிப்புடன் தான் கல்வியை அனைவருக்கும் வழங்க முடியும். என்றாலும், கல்வியை வணிகமாக்காமல், அதை ஒரு சேவையாக கருதி, தாங்கள் செலவழிக்கும் தொகைக்கேற்ப, நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். 

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். என்.சி.இ.ஆர்.டி.,கல்வி முறையில் உள்ள பாடத்திட்டம் மிகவும் தரமானதாக உள்ளது. அதன் உரிமையை பெற்று, அதன் பாடங்களை தமிழில் மொழிபெயர்த்தால், அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயரும்.

தன்னார்வலர்களை கொண்டே, ஒரு ஆண்டிற்குள் மொழிபெயர்ப்பை செய்து முடிக்கலாம். இவற்றை, சட்டசபையில் கல்வி அமைச்சரும், முதல்வரும் பரிசீலித்தால், பள்ளிக்கல்வி துறை வளர்ச்சி அடையும். இவ்வாறு, அவர் பேசினார். 

அனைவருக்குமானது அரசியல் தினமலர் நாளிதழ் துணை ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

இந்த பட்டசபை நிகழ்ச்சியில், அனைத்து மாணவர்களும் நன்றாக பேசினர். இங்கு பல பிரச்னைகள் குறித்து, தெளிவாக பேசினர். இந்த மாணவர்கள் இதோடு விட்டு விடாமல், தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்.

அரசியலில் தொழில்முறை அரசியல்வாதி தான் ஈடுபட வேண்டும் என்றில்லை; அனைவரும் ஈடுபடலாம். மனு அளிப்பது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்பது உள்ளிட்ட செயல்கள் கூட அரசியல் தான். அனைவரும், அரசியலில் பங்கேற்று பிரச்னைகள் பற்றி பேச வேண்டும்.தினமும் எந்தெந்த கட்சிகள் என்னென்ன சொல்கின்றன என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்கள், இங்கு விவாதித்த விஷயங்களை ஆரோக்கியமான கருத்தாக எண்ணி அரசு ஏற்றால், கல்வி மேம்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:பட்டசபை நிகழ்ச்சியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், எதிர்க்கட்சியினர் வைத்த கோரிக்கைகளை கல்வி அமைச்சரும், முதல்வரும் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். இப்படி சட்டசபையும் இருந்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது, இப்படி இருக்காது. பிரச்னைகள் இருக்க வேண்டும்; பிரச்னைகள் இருந்தால் தான் தெளிவு பிறக்கும். 

ஒரு மாணவி, ஆட்டுமந்தையை போல, மருத்துவர், பொறியாளர்களை உருவாக்குவதற்கான கல்வி மட்டுமே போதிக்கப்படுவதாக கூறினார். அவர் கூறிய ஆட்டுமந்தை என்ற வார்த்தை சுயசிந்தனை அற்ற நிலையை காட்டுகிறது. அதுதான் இன்றைய பள்ளிக்கல்வியின் நிலை.

அதனால் தான், அந்த துறைகளுக்கு அதிகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மருத்துவத் துறைக்கு, 75 லட்சம் ரூபாய் கேட்கப்படுகிறது. தற்போது நிறைய பேருக்கு, கலெக்டர் ஆகும் ஆசையும் வந்திருக்கிறது. மாணவர்களுக்கு அரசியல் சிந்தனை வரவேண்டும். அரசியல், யாருக்கும் பாரம்பரிய உரிமையோ, தொழிலோ அல்ல. மக்கள், தங்கள் பிரச்னைகளை பற்றி தைரியத்துடன் பேச முன்வர வேண்டும்.

புதிய சூழல் தேவை;கற்பனைத் திறனுக்கான வாய்ப்பை தமிழக கல்விக்கூடங்கள் மறுத்து வருகின்றன என்பதை மாணவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். அருகாமை பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தால், அவர்களின் சிந்தனை, விளையாட்டு நேரம் அதிகமாகும். இன்னும், கிராமப்புறங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. 

ஜாதி பார்த்து, மாணவர்கள் நட்பு வைத்துக் கொள்ளும் அவலம் நிலவுகிறது. சுதந்திரம் அடைந்து ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பின் தான், அபுல்கலாம் ஆசாத்தால், கல்வித்துறை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு, பின் மனிதவள மேம்பாட்டு துறை என பரிணாமம் அடைந்தது. ஆனால், கல்வி மனிதவளத்தை மேம்படுத்த, புதிய சிந்தனைகளை உருவாக்கும் சூழலை அமைத்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us