UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM
ADDED : ஜூன் 07, 2016 11:20 AM
தமிழகத்தில், மூன்று பல்கலைகளில் துணைவேந்தர் இல்லாததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
மதுரை காமராஜ் பல்கலையில், கடந்த, 2015 ஏப்ரல் முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவிலும், ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.
சென்னை பல்கலையிலும், நான்கு மாதங்களுக்கு மேலாக, துணைவேந்தர் இல்லாமல், அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. இந்த மாதம் முதல், அண்ணா பல்கலையிலும் துணைவேந்தர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி காலியாக உள்ள, மூன்று பல்கலைகளிலும், ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, பெயரளவில் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மூன்று பல்கலைக்கும், உயர்கல்வி செயலர் அபூர்வா ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அதனால், மூன்று பல்கலைகளின் கோப்புகளும், உயர்கல்வி துறை செயலர் அலுவலகம் உள்ள தலைமை செயலகத்தில் தேங்கி கிடக்கின்றன.
இதனால், துணைவேந்தர்கள் இல்லாமல், கல்விக் குழு கூட்டங்கள் நடக்கவில்லை. பாடத்திட்டங்களும் மாற்றப்படாமல் உள்ளன. பட்டம் முடித்தவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்க முடியவில்லை. மேலும், ஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி.,க்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அனுமதி கிடைக்கவில்லை; பிஎச்.டி., முடித்தவர்களுக்கு, டாக்டர் பட்டமும் அளிக்க முடியவில்லை.
