UPDATED : ஜூன் 13, 2016 12:00 AM
ADDED : ஜூன் 13, 2016 10:26 AM
சென்னை பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம், ஜனவரியில் முடிந்தது.
புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை, உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில், இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சிண்டிகேட் பிரதிநிதியாக, பேராசிரியர் ஜோதி சிவஞானம் நியமிக்கப்பட்டார்.
ஆனால் கடந்த மார்ச்சில், உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், திடீரென ஜோதி சிவஞானத்தை நீக்கிவிட்டு, ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீமன்
நாராயணன் நியமிக்கப்பட்டார்.உயர்கல்வி செயலரின் முடிவை எதிர்த்து, ஜோதி சிவஞானம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், சிண்டிகேட் கூட்டம், இன்று பிற்பகல் 2:30 மணிக்கு, சென்னை பல்கலை வளாகத்தில் அவசரமாக கூட்டப்படுகிறது. பேராசிரியர் ஜோதி சிவஞானம் நீக்கப்பட்ட உத்தரவை வாபஸ் பெறுவது மற்றும் பல்கலையின் நானோ சயின்ஸ் பிரிவிற்கு, மத்திய அரசு அளித்த, 16 கோடி ரூபாயை விதியை மீறி செலவு செய்தது ஆகியன குறித்து பிரச்னை எழுப்ப உறுப்பினர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
