எஸ்.எஸ்.ஏ., திட்டத்தால் ஒளி பெற்ற இயலாக் குழந்தைகள்
எஸ்.எஸ்.ஏ., திட்டத்தால் ஒளி பெற்ற இயலாக் குழந்தைகள்
UPDATED : ஜூன் 25, 2009 12:00 AM
ADDED : ஜூன் 25, 2009 05:23 PM
திண்டுக்கல்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும், ‘இயலாதோருக்கான பகல் நேரக் காப்பகத்தில்’ பயிற்சி பெற்ற 15 ஊனமுற்றவர்கள், பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
டாக்டர்களால் கைவிடப்பட்ட இரண்டு மாணவர்கள் உட்பட நடப்பாண்டு 16 பேர், பள்ளி செல்ல தகுதி பெற்றுள்ளனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், ‘இயலாதோருக்கான பகல் நேரக் காப்பகம்’ நடத்தப்பட்டு வருகிறது. 60 சதவீத ஊனத்தால் பாதிக்கப்பட்டு, தங்களது சொந்த தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத ஊனமுற்ற குழந்தைகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு சேர்க்கப்பட்ட பல ஊனமுற்ற குழந்தைகள், பயிற்சிக்கு பின்னர் மற்ற குழந்தைகளுக்கு இணையாக பள்ளிக்கு சென்று படிக்கின்றனர். இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 15 பேர், பள்ளிகளில் சேர்ந்து படிக்கத் துவங்கியுள்ளனர். தற்போது 16 பேர், பள்ளிக்கு செல்லும் தகுதி பெற்றுள்ளனர்.
நடக்க முடியாமல், கை, கால்கள் செயலிழந்த நிலையில், மூளைத் திறனும் பாதிக்கப்பட்டு இந்த மையத்திற்கு வந்த ஜி.பெருமாள் என்ற மாணவர், தற்போது ஒரு மணி நேரத்தில் ஒரு பெரிய கலர் பாசி மாலையை சரியான கலர் விகிதம் கலந்து கோர்த்து விடும் அளவுக்கு தகுதி பெற்றுள்ளார். பயிற்சிக்கு முன், கலர்களை தெளிவாகப் பிரிக்கும் அளவுக்கு இவருக்கு திறனும், ஒரு பாசியை எடுத்து நூலில் கோர்க்கும் அளவுக்கு கைகளில் வலுவும் இல்லாமல் இருந்தது. தற்போது தெளிவாக எழுதி, பேசவும் செய்கிறார்.
கிஷோர் பாண்டி, அருண் பாண்டி என்ற இரண்டு சகோதரர்கள் தசை சிதைவுப் பிரச்னைக்கு உள்ளாகினர். டாக்டர்கள் இனி இவர்களை மீட்பது சிரமமென இவர்களின் தாய் விமலாவிடம் கூறி விட்டனர். இந்நிலையில், இவர்கள் இந்த மையத்தில் சேர்க்கப்பட்டனர். இங்கு அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் தற்போது மாணவர்களே மையத்திற்கு நடந்து சென்று படிக்கின்றனர்.
கிஷோர் பாண்டி தெளிவாக எழுதுவது, பல்வேறு வடிவ பொம்மைகளைச் செய்வது, பேசுவது உட்பட அனைத்திலும் தெளிவாகத் தேர்ச்சி பெற்று நடப்பாண்டு பள்ளிக்கு செல்ல உள்ளார். அருண் பாண்டிக்கு இன்னும் சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவர்களின் தாய் விமலா கூறியதாவது:
இந்த மையத்தில் வழங்கப்பட்ட பயிற்சி, என் மகன்களுக்கு உதவியாக இருந்தாலும், லட்சத்தில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் இந்த தசை சிதைவுப் பிரச்னைக்கு சித்த மருத்துவம் மூலம் முழுமையான குணம் அளிக்க முடியுமெனக் கூறுகின்றனர். ஆனால், அதற்கு மாதம் எட்டாயிரம் ரூபாய் செலவு செய்து, சில மாதங்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
என் இரண்டு குழந்தைகளும் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டதால், பண வசதியின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவிக்கிறேன். என் கணவர் கூலி வேலை செய்கிறார். வெளியில் இருந்து உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு விமலா கூறினார்.