பொறியியல் கவுன்சிலிங்: ரேங்க் பட்டியல், அட்டவணை வெளியீடு
பொறியியல் கவுன்சிலிங்: ரேங்க் பட்டியல், அட்டவணை வெளியீடு
UPDATED : ஜூன் 26, 2009 12:00 AM
ADDED : ஜூன் 26, 2009 12:29 PM
ரேங்க் பட்டியலை http://www.annauniv.edu/tnea2009/rank.html அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முதல் ரேங்க் பெற்றுள்ள பழநி மாணவன் அரவிந்த் உட்பட 43 பேர் 200க்கு 200, ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றுள்ளனர். தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களில், இருவர், மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் படிப்பிற்கு மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 7,037 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 227 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் (100) இயற்பியல் (50) வேதியியல் (50) என மொத்தம் 200, ‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுகின்றனர்.
தரவரிசையில், முதலிடம் பெற்ற பழநி மாணவன் அரவிந்த் கூறுகையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., படிக்க விரும்புகிறேன். அதன்பிறகு ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதவுள்ளேன்,” என்றார்.
இரண்டாவது ‘ரேங்க்’ பெற்றுள்ள மயிலாடுதுறை மாணவி கார்த்திகா கூறுகையில், “சென்னை மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்புகிறேன். மருத்துவ படிப்பிற்கும் 200, ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றுள்ளேன்,” என்றார்.
மூன்றாவது ‘ரேங்க்’ பெற்றுள்ள காஞ்சிபுரம் மாணவன் பாலாஜி பிரதீப் கூறுகையில், “சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்புகிறேன். மருத்துவ படிப்பு ஐந்து ஆண்டுகள் ஆனாலும், எதிர்காலம் நன்றாக இருக்கும். பொறியியல் படிப்பு நான்கு ஆண்டுகளில் எழுச்சி, வீழ்ச்சி என மாறிக்கொண்டிருக்கிறது,” என்றார்.
பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் மொத்தம் 43 பேர், 200க்கு 200 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆறாவது ‘ரேங்க்’ பெற்றுள்ள கோவை மாணவன் கீர்த்தி சூர்யகுமார், ஏழாவது ‘ரேங்க்’ பெற்றுள்ள வேலூர் மாணவன் ஆனந்த் சாமுவேல் இருவரும், 200க்கு 200 ‘கட்-ஆப்’ மதிப்பெண், கணிதம், இயற்பியல், நான்காவது விருப்பப் பாடத்தில் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பதுடன், பிறந்த தேதியும் (08.01.1992) ஒன்றாக உள்ளது.
இம்மாணவர்களுக்கு, ‘ரேண்டம்’ எண் அடிப்படையில் தரவரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் நாகப்பட்டினம் மாணவன் சிவா முதல் ‘ரேங்க்’ பெற்றுள்ளார். ஜூலை 5ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
ஜூலை 6 முதல் 8ம் தேதி வரை பிளஸ் 2வில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 6ம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
அன்று, 182.50 ‘கட்-ஆப்’ மதிப்பெண் வரையும், 7ம் தேதி 169, 8ம் தேதி 156 ‘கட்-ஆப்’ வரையும் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 9ம் தேதி உடல் ஊனமுற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அப்பிரிவில் 76.25 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப் பட்டுள்ளனர்.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 10ம் தேதி முதல் துவங்குகிறது.
ஜூலை 10ம் தேதி 199 ‘கட்-ஆப்’ வரையும், 11ம் தேதி 197, 12ம் தேதி 195, 13ம் தேதி 193, 14ம் தேதி 191, 15ம் தேதி 189, 16ம் தேதி 187, 17ம் தேதி 185, 18ம் தேதி 183, 19ம் தேதி 181, 20ம் தேதி 179, 21ம் தேதி 177, 22ம் தேதி 175, 23ம் தேதி 173, 24ம் தேதி 171, 25ம் தேதி 169, 26ம் தேதி 167, 27ம் தேதி 165, 28ம் தேதி 163, 29ம் தேதி 161 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.