UPDATED : ஜூன் 27, 2009 12:00 AM
ADDED : ஜூன் 27, 2009 06:04 PM
என்.சி.டி.இ., எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி மையம் இதைத் தெரிவித்துள்ளது. விரைவில் ஆசிரியர் பயிற்சிக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக என்.சி.டி.இ., கூறியுள்ளது. ஆசிரியர் பயிற்சியைத் தரும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும் தரமில்லாமல் பல்கிப் பெருகும் நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஆசிரியர் பயிற்சி மையங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அது கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் தரம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. தரமில்லாத150 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை என்.சி.டி.இ., மூடியுள்ளது. எனினும் அதோடு என்.சி.டி.இ.,யின் வேலை முடியவில்லை. செயல்படும் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவது அதன் முக்கிய வேலையாகும்.
எனவே தான் புதிய பாடத்திட்டம் தேவைப்படுவதாக என்.சி.டி.இ., தலைவர் முகம்மது அக்தார் சித்திக் கூறியுள்ளார். பி.எட்., படிப்பில் சேருவதற்குத் தேவைப்படும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் 45லிருந்து 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பி.எட்., படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணி புரிய சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பதுடன் அதில் எம்.எட்., முடித்திருப்பதும் கூடுதலாக பிஎச்டி., முடித்திருப்பதும் அவசியம் என விரைவில் குறைந்தபட்ச தகுதி குறித்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. கூடுதலாக யு.ஜி.சி., யின் நெட் தேர்வு தகுதியும் கட்டாயமாக்கப்படவுள்ளது. தற்போது சம்பந்தப் பட்ட பாடத்தில் பி.எட்., முடித்திருந்தாலே போதும் என்பது நடைமுறையில் உள்ளது.
பாடத் திட்டத்தைப் பொறுத்த வரை அதில் சுற்றுச்சூழல் மற்றும் அமைதி குறித்த பகுதிகள் கட்டாயம் இடம் பெறவுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த பகுதிகளும் இதில் இடம் பெறவுள்ளன. பாடத்திட்டம் குறித்த நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது. பணியில் சேருவதற்கு முன்பு பெறப்படும் பி.எட்., பயிற்சி மட்டுமே ஒருவரை திறமையான ஆசிரியராக மாற்றுவதில்லை. எனவே பணியில் இருப்பவருக்கும் தரப்பட வேண்டிய பயிற்சியானது என்.சி.டி.இ.,யால் வலியுறுத்தப்படுகிறது.
நாட்டில் தற்போது 10 ஆயிரத்து 350 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை 14 ஆயிரத்து 606 பயிற்சிகளைத் தருகின்றன. ஆண்டு தோறும் 1.78 லட்சம் பேருக்கு இதில் பயிற்சிதரப்படுகிறது. இதில் தரமில்லாமல் புற்றீசல் போல பல நிறுவனங்களும் உருவாகின்றன.
எனவே ஆசிரியர் தேவை மற்றும் சப்ளை குறித்த ஆய்வுகளை என்.சி.டி.இ., முனைப்புடன் நடத்தி வருகிறது. இந்த ஆய்வுகள் கேரளா, ஆந்திரா, உ.பி., தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில் புதிதாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க அனுமதிக்கப் போவதில்லை என சித்திக் தெரிவித்துள்ளார்.