UPDATED : ஜூன் 27, 2009 12:00 AM
ADDED : ஜூன் 27, 2009 12:19 PM
தேசிய அறிவுக் கழகம் எனப்படும் என்.கே.சி., கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருவதை அறிவோம். பிரபல அறிஞர் சாம் பிட்ரோடா தலைமையில் இயங்கி வரும் இந்தக் கழகம் இந்தியாவில் கல்வி மேம்பாடு குறித்த பல்வேறு புரட்சிகரமான சீர்திருத்தங்களை அறிவுறுத்தியுள்ளது.
எனினும் நடைமுறையில் இதன் சீர்திருத்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சமீபத்தில் டில்லி மாநில அரசு இக்கழகத்தின் சீர்திருத்த பரிந்துரைகள் குறித்த முதல் புளூ பிரின்டை வெளியிட்டுள்ளது. இது போல வெளியிடும் முதல் இந்திய மாநிலம் டில்லி தான் என சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
உயர் கல்வியில் சீர்திருத்தங்கள், பள்ளிக் கல்வி மேம்பாடு, தொழிற்கல்வி குறித்த பல பரிந்துரைகள் இக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிலும் மேம்பட்ட தரம் என்பதே இக்கழகத்தின் தாரக மந்திரமாக வெளிப்படுகிறது. பிற மாநிலங்களும் தனது கழகத்தின் பரிந்துரைகளை விரைவில் ஏற்றுக் கொள்ளும் என பிட்ரோடா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டில் இந்த கழகம் உருவாக்கப்பட்டது. நாட்டிலுள்ள அறிவு சார்ந்த நிறுவனங்களுக்கு தர மேம்பாடு குறித்த வழிகாட்டலுக்கும் அடிப்படை கல்விக் கட்டுமான வசதிகளை விரிவுபடுத்துவதும் இதன் உயரிய லட்சியமாக வரையறுக்கப்பட்டது. டில்லியைத் தொடர்ந்து குஜராத், ஆந்திரா, ஒரிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களும் விரைவில் இக்கழகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுள்ளன.
டில்லிக்கான பிரத்யேகமான பல்கலைக்கழகம், பட்டப்படிப்புக்கென்று தனியாக பல்கலைக்கழகம், இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம் போன்ற பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என டில்லி அரசு தெரிவித்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப மையம் ஒன்றை நிறுவிடும் நோக்கில் அறிவு நகரம் ஒன்று அமைக்கப்படுவதாகவும் அந்த மாநில அரசு கூறியுள்ளது.