பணியிலிருப்பவருக்கு ஐ.ஐ.எம்.,மின் சிறப்புப் படிப்பு
பணியிலிருப்பவருக்கு ஐ.ஐ.எம்.,மின் சிறப்புப் படிப்பு
UPDATED : ஜூன் 27, 2009 12:00 AM
ADDED : ஜூன் 27, 2009 04:49 PM
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனம் அதன் தரமான கல்விக்காக உலகெங்கும் பெயர் பெற்றது. இ.பி.ஜி.பி., எனப்படும் பணியிலிருப்பவருக்கான சிறப்பு மேனேஜ்மென்ட் படிப்பை இது நடத்துகிறது. எக்சிகியூடிவ் போஸ்ட் கிராஜூவேட் புரொகிராம் என்பது இதன் விரிவாக்கம்.
இதில் ஏற்கனவே பணி ஒன்றில் இருப்பவர் மட்டுமே சேர முடியும். 2 ஆண்டு கால படிப்பாகும் இது. நாட்டின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்களும் கோழிக்கோடு ஐ.ஐ.எம்.,மின் அனுபவம் மிக்க ஆசிரியர்களும் இப் படிப்புக்கான வகுப்புகளை நடத்துவர்.
முதலாமாண்டு 2 செமஸ்டர்களைக் கொண்டிருக்கும்.இதில் பொது மேலாண்மை குறித்த 27 பாடங்கள் இடம் பெறும். இதில் 75 மணி நேர வகுப்புகள் நேரடி வகுப்புகளாகவும் 375 மணி நேர வகுப்புகள் இன்டராக்டிவ் முறையிலும் நடத்தப்படும். 2ம் ஆண்டில் இதில் படிப்பவர் 2 சிறப்புப் பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
அதில் ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட், ஸ்டிராடஜிக் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவை இடம் பெறுகின்றன. ஒவ்வொரு சிறப்புப் படிப்பும் தலா 180 மணி நேர வகுப்புகளைக் கொண்டவை. இப்படிப்பில் கோழிக்கோடு ஐ.ஐ.எம்.,மோடு இணைந்து இன்டராக்டிவ் முறைக் கல்வியைத் தரவிருப்பது ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாகும். 2002ம் ஆண்டிலிருந்து கோழிக்கோடு ஐ.ஐ.எம்.,மோடு இணைந்து செயல்பட்டு வருகிறது ஹியூஸ் நிறுவனம். இதுவரை 2
ஆயிரம் மாணவர்கள் இந்த ஒருங்கிணைப்பால் பயன்பட்டுள்ளனர்.
பணியிலிருப்பவருக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்கவும் பதவி உயர்வு பெறவும் தேவைப்படும் மேனேஜ்மென்ட் திறன்களை இப்படிப்பு கற்றுத் தரும் என ஐ.ஐ.எம்., நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிகாரி நிலையில் பணியிலிருப்பவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் அவர்களால் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இதைப் பெற முடியாது.
எனவே பணியிலிருந்து கொண்டே இதைப் பெற வழி செய்யும் படிப்புகளே இன்றைய கடுமையான தேவையாக உள்ளது. இதைத் தருவது இப்படிப்பு என கோழிக்கோடு ஐ.ஐ.எம்., கூறியுள்ளது. இதன் இந்தப் படிப்பில் ஏற்கனவே 25 ஆயிரம் பேர் சேர்ந்து பயனடைந்துள்ளனர். மேனேஜ்மென்ட் படிப்பின் முன்னோடி நிறுவனமான ஐ.ஐ.எம்.,மிலிருந்து இது போன்ற டிப்ளமோ படிப்பைப் பெறுவது எந்த எக்சிகியூடிவ் நிலை அதிகாரிக்கும் பெரிய கனவாகவே இருக்கும் என்பதால் இப் படிப்புக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது.
இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் இமேட் என்று இதற்காகவே நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். பின்பு நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு இறுதியாக படிப்பில் சேரலாம். பட்டதாரிகளும் சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., தகுதியுடைய பணியிலிருக்கும் அதிகாரிகள் இதில் சேரலாம். படிப்புக்கான கட்டணம் சுமார் ரூ.5 லட்சம். முழு விபரங்களைப் பார்க்கும் இணைய தள முகவரி www.iimk.ac.in; www.hnge.in