UPDATED : ஜூன் 30, 2009 12:00 AM
ADDED : ஜூன் 30, 2009 04:42 PM
சென்னை: காட்டாங்கொளத்தூர், எஸ்.ஆர். எம்., மருத்துவக் கல்லூரியில் தமிழ் மன்ற முத்தமிழ் விழா நடந்தது.
கல்லூரி தலைவர் பச்சைமுத்து விழா மலரை வெளியிட்டு பேசுகையில், ‘கல்வியுடன் கலையும் சேர்ந்து கற்கவேண்டும். நோயாளிகளை மாத்திரை, மருந்து, சிகிச்சையால் மட்டும் குணப்படுத்திவிட முடியாது. மருத்துவர்கள் அணுகும் முறையும் உள்ளது. குடும்ப மகிழ்ச்சிக்கு கலை மிகவும் முக்கியம்,’ என்றார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் க.ப.அறவாணன் பேசுகையில், ‘சுண்டு விரல் அடிப்பட்டால், கண்கள் கண்ணீர் சிந்துகின்றன. அப்படி மனிதன், சக மனிதன் மேல் அக்கறை கொள்ள வேண்டும். இலங்கை பிரச்னையின்போது, தமிழகம் மிகவும் இயல்பாக இருந்தது. அதைக்கண்டு வேதனைப்பட்டேன்’ என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், ‘தமிழ் தொலைந்து விடக்கூடாது என்பதற்காக ஆதங்கப்படுகிறேன். எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும். சிலர் தமிழை வியாபாரமாக்கிவிட்டனர். அவர்களுக்கு இன உணர்வு இல்லை. இலங்கையில் இரண்டு லட்சம் மக்கள் இன்னமும் அவஸ்தைபட்டு வருகின்றனர். திரைப்படங்களில், ‘டிவி’ சீரியல்களில் வக்கிரம் அதிகரித்துவிட்டது. விஞ்ஞானம் வளர வளர மனிதநேயம் குறைந்துவிட்டது.’ என்றார்.
விழாவில், கவிஞர் இன்குலாப், பதிவாளர் சேதுராமன், இணை பதிவாளர் சந்திரபிரபா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முத்தமிழ் விழா மலரை கல்லூரி தலைவர் பச்சைமுத்து வெளியிட்டார். விழா தொடர்பாக நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா பரிசுகளை வழங்கினார். முன்னதாக திருமதி அருளின் தமிழர் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.