ஓவியக்கலை ஆசிரியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம்
ஓவியக்கலை ஆசிரியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம்
UPDATED : ஜூலை 21, 2009 12:00 AM
ADDED : ஜூலை 21, 2009 12:42 PM
சென்னை: “சுற்றுலாத் துறையும் ஓவியத்துறையும் இணைந்து கருத்துருக்களை காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,” என்று சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு தெரிவித்தார்.
சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறை மற்றும் அரசு கவின் கலைக் கல்லூரி இணைந்து, ‘எண்ணங்களில் வண்ணங்கள்’ எனும் பள்ளி ஓவியக்கலை ஆசிரியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாமை துவக்கின. இதற்கான துவக்க விழா, அரசு கவின் கலைக் கல்லூரியில் 20ம் தேதி மாலை நடந்தது.
ஓவியம் வரைந்து, முகாமைத் துவக்கி வைத்த சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு பேசியதாவது:
சுற்றுலாத்துறை இரண்டாண்டுகளாக இந்த கல்லூரியுடன் இணைந்து செயலாற்றிவருகிறது. சுற்றுலாவோடு கலைப் பண்பாட்டுத் துறை இணைந்து, ஒரே தேரில் பூட்டிய இரண்டு குதிரைகள் போல் பணியாற்றி வருகிறது. ஓவியங்களின் மூலம் நமது கலை, பண்பாடுகளை வளர்த்து வருகிறோம். சுற்றுலாத் துறையும் ஓவியத்துறையும் இணைந்து கருத்துருக்களை காட்சிப்படுத்தி, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.
எல்லாரிடமும் கலை உணர்வு இருக்கிறது. தெருவோரச் சிறுவர்களிடம் கூட, ஓவியத் திறமை இருக்கிறது. அதை வெளிப் படுத்தும் சூழல் கிடைக்கும் போது தான், கலை உணர்வு வெளிப்படுகிறது. படிப்பில் திறமையில்லாத மாணவர்களின் ஓவியத் திறமையை வளர்த்து அவர்களை புகழ் பெறச் செய்த ஆசிரியர்கள் உண்டு. கம்ப்யூட்டர் மட்டும் வாழ்க்கையல்ல; கலையும் வாழ்க்கை தான்.
ஓவியக் கண், காவியக் கண் மற்றும் சாதாரண கண் என வேறுபாடுகள் உள்ளன. ஓவிய ஆசிரியர்கள், திறமையை வளர்த்துக் கொண்டு, நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுத் தர இது நல்ல வாய்ப்பு. இவ்வாறு இறையன்பு பேசினார்.
பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் குற்றாலிங்கம் வாழ்த்திப் பேசினார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், கலை பண்பாட்டுத் துறை கமிஷனர் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
