மேலும் 2 மருத்துவ கல்லூரிகளுக்கு எம்.சி.ஐ., அனுமதி
மேலும் 2 மருத்துவ கல்லூரிகளுக்கு எம்.சி.ஐ., அனுமதி
UPDATED : ஜூலை 23, 2009 12:00 AM
ADDED : ஜூலை 23, 2009 10:38 AM
இதில் ஒரு கல்லூரியின் மூலம் அரசு ஒதுக்கீட்டிற்கு 65 இடங்கள் கிடைக்கவுள்ளன.
தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த எம்.சி.ஐ., மீண்டும் அனுமதி மறுத்துள்ள நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க, அனுமதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் மேலும் இரு புது மருத்துவக் கல்லூரிகளை துவங்க எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.
காஞ்சிபுரத்தில் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரிலான கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படவுள்ள இக்கல்லூரியின் மூலம் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக 65 இடங்கள் கிடைக்கவுள்ளன. மருத்துவ இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கின்போது இந்த இடங்கள் சேர்க்கப்படும். இதை கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் அண்ணாமலை உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 283 இடங்கள் உள்ளன. தற்போது கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூலம் 65 இடங்கள் கூடுதலாக கிடைக்கவுள்ளதால், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை 348 ஆக உயரும்.
சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் சார்பில், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் புது மருத்துவக் கல்லூரியை துவங்கவும் எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இக்கல்லூரி திருச்சியில் துவக்கப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இக்கல்லூரி செயல்பட இருப்பதால், இக்கல்லூரியிலிருந்து மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்கள் கிடைக்காது.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த எம்.சி.ஐ., அனுமதி மறுத்திருந்தது. இதனால், முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் இக்கல்லூரி இடம்பெறவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் 10ம் தேதி நடந்த எம்.சி.ஐ., செயற்குழு கூட்டத்திலும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவது சந்தேகமே.
