மெட்ரிக் தேர்வுகளை மண்டல தேர்வுத்துறையே நடத்த ஏற்பாடு
மெட்ரிக் தேர்வுகளை மண்டல தேர்வுத்துறையே நடத்த ஏற்பாடு
UPDATED : ஜூலை 23, 2009 12:00 AM
ADDED : ஜூலை 23, 2009 11:31 AM
மதுரை: மெட்ரிகுலேஷன் தேர்வுகளை, இனி தேர்வுத் துறையின் மண்டல அலுவலகங்களே நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில், அரசு தேர்வுகள் துறை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளை அச்சிட்டு வழங்குவது, தேர்வுத் துறையின் சென்னை இயக்குனர் அலுவலகப் பணியாக இருந்து வருகிறது.
மீதியுள்ள 95 சதவீத பணிகளை சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை போன்ற இடங்களில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களே கவனிக்கின்றன. மாணவர் பெயர் பட்டியல் தயாரிப்பு, அவற்றை திருத்தம் செய்து மீண்டும் சரிபார்ப்பது, வினாத்தாள், எண்கள் வழங்குதல், தேர்வு மையங்களை நிர்ணயிப்பது, மதிப்பெண் பட்டியலை பள்ளிகளுக்கு பிரித்து வழங்குவது உட்பட பல பணிகள், துணை இயக்குனர் அலுவலகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போதைய சூழலில், இயக்குனர் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாததால், மெட்ரிக் தேர்வுக்கான பணியையும் மண்டல அலுவலகங்களிடமே விட்டுவிட, இயக்குனரகம் தீர்மானித்துள்ளது. இயக்குனர், இணை இயக்குனர்கள், மண்டல துணை இயக்குனர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் கருத்துரு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, வரும் அக்டோபர் தேர்வு முதல் மெட்ரிக் தேர்வுகளின் நடைமுறை செயல்பாடுகளை, அந்தந்த மண்டல அலுவலகங்களே மேற்கொள்ள உள்ளன. இதுவரை மெட்ரிக் பள்ளிகள், தேர்வு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும், சென்னை இயக்குனர் அலுவலகத்தையே தொடர்பு கொண்டிருந்தன. இப்புதிய நடைமுறையால், அந்தந்த பகுதி மண்டல அரசு தேர்வுத் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டால் போதும். பத்தாம் வகுப்பு தொடர்பான விவரங்களை பெறுவது போல, மெட்ரிக் தேர்வு தொடர்பான விவரங்களையும் இங்கு பெற முடியும்.
