பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது
பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது
UPDATED : ஜூலை 24, 2009 12:00 AM
ADDED : ஜூலை 24, 2009 10:30 AM
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 927 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வில், மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 642 மாணவர்களும், உடனடித் தேர்வை எழுதி முடித்துள்ளனர்.
விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பணிகள் இந்த வார இறுதிக்குள் முடிந்துவிடும். எனவே, அடுத்த வாரம் 27 அல்லது 28 தேதிகளில் பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு முடிவுகள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தனர்.
இரண்டு தேர்வுகளிலும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாலும், தாங்கள் விரும்பும் உயர்கல்வி படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் கவுன்சிலிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், இதே கல்வியாண்டில் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில், விரும்பிய படிப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
அதேபோல், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் முதல் குரூப் கிடைக்காது. அரசு பள்ளிகளில் சேர வாய்ப்பு கிடைத்தாலும், எந்த குரூப்-ல் இடம் காலியாக இருக்கிறதோ அதில் தான் சேர்ந்தாக வேண்டும்.
