பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு எதிர்த்த மனு தள்ளுபடி
பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு எதிர்த்த மனு தள்ளுபடி
UPDATED : ஜூலை 25, 2009 12:00 AM
ADDED : ஜூலை 25, 2009 12:14 PM
சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் தாக்கல் செய்த மனு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வுக்காக விண்ணப்பித்தேன். தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பாணையில், குரூப்-1 பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. ஆரம்பகட்டத் தேர்வில் எனக்கு 213 மதிப்பெண்கள் கிடைத்தது. பிரதான தேர்வைப் பொறுத்தவரை, கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் 196.5 என்றும், பெண்களுக்கு 180 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பெண்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த ஆண்களுக்கு பணி நியமனம் கிடைக்க வாய்ப்பில்லை. பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், ஆண்களுக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு பணியாளர் விதியில், பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளித்தது சட்டவிரோதம். இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, தமிழ்நாடு பணி விதி 21ஐ செல்லாது என உத்தரவிட வேண்டும்.
பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பாணை செல்லாது என உத்தரவிட வேண்டும். எந்த இடஒதுக்கீடும் இல்லாமல் நேரடியாக தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி டி.முருகேசன் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு மாநில பணி விதி 21, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதாகவே உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக கூற முடியாது.
பெண்களுக்கு சம பங்கு கிடைக்க அதிகாரம் அளிக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது குறித்து எங்களின் கவனத்திற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் கொண்டு வந்தார். இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரின் வாதத்தில் எந்த பொருளும் இல்லை. தமிழக அரசு கொண்டு வந்த விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
