மருத்துவப் படிப்புக்கு நாடெங்கும் ஒரே நுழைவுத் தேர்வு
மருத்துவப் படிப்புக்கு நாடெங்கும் ஒரே நுழைவுத் தேர்வு
UPDATED : ஜூலை 25, 2009 12:00 AM
ADDED : ஜூலை 25, 2009 03:01 PM
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பைத் தரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்த பரிந்துரையை இந்திய மருத்துவக் கவுன்சில் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மெரிட் முறை தேர்ச்சியில் குளறுபடிகள் அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த பரிந்துரையை மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசின் சுகாதார அமைச்சகமும் பரிசீலித்து வருகிறது.
ஏற்கனவே மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தனது 100 நாள் திட்டத்தின் கீழ் உயர்கல்விப் படிப்புக்கான கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றும் தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
உயர் கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் குறித்த யஷ்பால் கமிட்டி உயர்கல்வி படிப்புகளுக்கு ஜி.ஆர்.இ., முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்த உரிய அதிகார வரம்பை மத்திய அரசு யாருக்குத் தருகிறதோ அது இதை நடத்தும் என்று நம்பப்படுகிறது.
