UPDATED : ஜூலை 30, 2009 12:00 AM
ADDED : ஜூலை 30, 2009 12:03 PM
பொறியியல் கவுன்சிலிங்கில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெயரில் துவக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை.
மூன்று தமிழக அமைச்சர்கள் சார்பில் கடந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன. இந்த ஆண்டும் மூன்று தமிழக அமைச்சர்கள் பொறியியல் கல்லூரிகள் துவக்கினர். ஜூலை 29ம் தேதி மாலை நிலவரப்படி, சூர்யா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜியில் 256 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 22 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 195 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 92 இடங்கள் நிரம்பியுள்ளன. கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 201 அரசு ஒதுக்கீடு இடங்களில், 61 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இவை மூன்றும் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டவை.
இந்த ஆண்டு துவக்கப்பட்ட வி.எஸ்.ஏ., எஜூகேஷனல் அண்டு சேரிட்டபிள் டிரஸ்ட் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், கேர் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எம்.ஆர்.கே., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய மூன்று அமைச்சர்களின் கல்லூரிகளில், 156 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், முறையே எட்டு, 11, 17 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
இதில் சில கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்படும் பொறியியல் கவுன்சிலிங் கல்விக் கண்காட்சியில், ஸ்டால் அமைத்து மாணவர்களை ஈர்க்க முயற்சித்து வருகின்றன.
