UPDATED : ஜூலை 31, 2009 12:00 AM
ADDED : ஜூலை 31, 2009 11:40 AM
புதுடில்லி: நாட்டின் உயர்கல்வி துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கூடுதலாக ஏழு மேலாண்மை கல்வி மையங்களை (ஐ.ஐ.எம்.,) அமைக்க மத்திய மனித வளத்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து மனித வளத்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
நாட்டில், கூடுதலாக ஏழு, ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.எம்.,) அமைக்க, மனிதவளத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வரும் நாட்களில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக ஏழு ஐ.ஐ.எம்.,கள் அமைக்கும் திட்டத்திற்கு, மனிதவளத்துறை அமைச்சகத்தின் நிதிக்குழு கடந்த மாதம் 7ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இவற்றில், நான்கு ஐ.ஐ.எம்.,கள், தமிழகம், அரியானா, சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமைய உள்ளன. இவைகள், இந்த கல்வியாண்டு முதலே துவங்கப்படுவதோடு, பகுதி நேர பாடத்திட்ட முறையில் செயல்படும்.
அதேபோல், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மூன்று ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் செயல்பாடு, அடுத்த கல்வியாண்டு முதல் துவங்கும். இவ்வாறு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
