UPDATED : ஜூலை 31, 2009 12:00 AM
ADDED : ஜூலை 31, 2009 02:21 PM
கோவை: பாரதியார் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பல்கலை அமைந்துள்ள தொண்டாமுத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்பே, புதிய துணைவேந்தரின் பெயரை அறிவிக்க வேண்டும் என கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தராக திருவாசகம் பதவி வகித்து வருகிறார். ஆக., 9ம் தேதியுடன் இவரது பதவிக் காலம் முடிகிறது. நாட்டில் தரமான கல்வி வழங்கும் சில பல்கலைகளில் முக்கியமானது என்ற பெயரை பெற்றுள்ள பாரதியார் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அரசு அமைத்துள்ள குழு, மூன்று பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த பட்டியலில், தற்போதைய துணைவேந்தர் திருவாசகமும் உள்ளார். இவருடன் தனியார் கலைக் கல்லூரி முதல்வர் சாமிநாதன், பாரதியார் பல்கலையின் ஓய்வு பெற்ற கணித பேராசிரியர் கந்தசாமி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். இடைத்தேர்தல் முடியும் வரை அரசு நியமனங்கள், பதவி உயர்வு எதுவும் இருக்கக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், புதிய துணைவேந்தர் பெயரை உடனடியாக அறிவிக்கக் கூடாது என்பதே அரசியல் கட்சியினர் கருத்து.
கடந்த சில நாட்களுக்கு முன் பாரதியார் பல்கலையில் சில அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதுவும் இடைத்தேர்தலை மனதில் வைத்தே நடந்ததாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவதாகவும் கலெக்டரிடம் சிலர் புகார் செய்தனர். இதையடுத்து, பதவி உயர்வு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
பேராசிரியர் பதவி உயர்வே, தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதே பல்கலையின் புதிய துணைவேந்தர் பெயரை அறிவிப்பது தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாக அமைந்து விடும் என கட்சியினர் கருதுகின்றனர்.
