UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 10:52 AM
சென்னை: முதுகலை ஆசிரியர்கள் 250 பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் ஒதுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், 250 பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிலுவையில் இருந்தன. இதை நிரப்ப, கடந்த மாதம் 23, 24ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. 900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், 400 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெறும் வயதை நெருங்கியவர்கள் என பல்வேறு காரணங்களால் 500 பேர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, 400 பேரில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் 250 பேரை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுமென ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களில் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள 294 பணியிடங்களை நிரப்ப, தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு இயக்குனரகத்திடம் கேட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பட்டியல் வந்ததும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தி, நிலுவைப் பணியிடங்களுக்குரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்ய, விரைவில் போட்டித் தேர்வு நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான விண்ணப்பங்கள் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் என்றும், போட்டித் தேர்வு செப்டம்பரில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
