UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 01:02 PM
இந்தியாவில் ஆசிரியர்களை உருவாக்குவதற்காகத் தரப்படும் பயிற்சி முறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மத்திய மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) புதிய விதிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் தரக்கட்டுப்பாடுகளையும் உருவாக்கி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிரியர் பயிற்சியைத் தரும் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக என்.சி.டி.இ., சட்டம் 13 மற்றும் 17ன் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் தரப்படுவதற்காக ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பவர்களுக்கான பள்ளியளவிலான கணக்கீடுகளை 2007-08ம் ஆண்டு முதல் 2016-17ம் ஆண்டு வரையிலான கணக்கினைக் கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குத் தரமான பயிற்சியைத் தருவதற்காக டி.ஐ.இ.,டி., சி.டி.இ., ஐ.ஏ.எஸ்.இ., போன்ற நிறுவனங்களின் மூலமாக மாநில அரசுகளுக்குப் போதுமான நிதியுதவிகளைச் செய்து வருகிறது. பாடத்திட்டங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்றபடி பயிற்சிகளின் தரமானது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதன்மூலமாக ஆசிரியர்களின் திறன் மேம்பாடு குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பி.எட்., பயிற்சி பாட முறையை மேம்படுத்தும் நோக்கில் என்.சி.எப்., தந்துள்ள மாதிரியின் அடிப்படையில் புதிய தேசிய பாடத் திட்ட வலைஅமைப்பினை உருவாக்கவும் என்.சி.டி.இ., இறுதி வடிவத்தைத் தந்துள்ளது.
