UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 06:05 PM
காலாப்பட்டு: புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் கல்வியும் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களும்’ குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
விழாவில் முன்னாள் எம்.பி., பேராசிரியர் ராமதாஸ் பேசுகையில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களே அடித்தளமாக விளங்கி வருகின்றனர். கோத்தாரி கமிஷன் கூட வகுப்பறையில் தான் நாட்டினுடைய வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது. சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பயன்படும் வகையில் மாணவர்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.
மாறிவரும் காலத்துக்கேற்ப பொறியியல் கல்வியில் மாற்றங்கள் அவசியம். கல்லூரி ஆசிரியர்களும் தங்களுடைய திறமைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த கருத்தரங்கில் அலசப்பட்ட கருத்துகளை மத்திய அரசிடம் முன்வைப்பதன் மூலம் உயர்கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்’ என்றார்.
முன்னாள் துணைவேந்தர் ஞானம், முனைவர் முத்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த சிறப்பு அமர்வுகளில் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய நிலை, பாடத்திட்ட அமைப்பு, பொறியியல் கல்லூரியில் காணப்படும் சிக்கல்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக அலசப்பட்டது.
கல்லூரி முதல்வர் பிருத்திவிராஜ் வரவேற்றார். பேராசிரியர் பஷீர் அகமதுகான் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜிவ் யாதவ் வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் கண்ணபிரான் சிறப்புரையாற்றினார்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்துகொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி பல்கலைக்கழக பொருளாதார துறை, புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
